ஆக்கிரமிப்புகளால் நீர்வரத்தை இழந்த குட்டாணி குளம்

சின்னாளபட்டி: கலிக்கம்பட்டி குட்டாணி குளத்தின் வரத்து வாய்க்காலில் தடைகளால் 15 ஆண்டுகளாக நீர்வரத்து பாதித்துள்ளது.

ஆத்துார் ஒன்றியம் கலிக்கம்பட்டியில் சின்னாளப்பட்டி செல்லும் ரோட்டில் அமைந்துள்ளது குட்டாணி குளம். 6.75 ஏக்கர் பரப்பளவிலான இக்குளத்திற்கு காந்தி கிராமம் ஓடை வழியே சிறுமலையிலிருந்து வரும் மழைநீர் வரத்து மட்டுமே முக்கிய ஆதாரமாகும். இதுதவிர வரத்து வாய்க்காலை சுற்றியுள்ள பகுதிகளில் பெய்யும் மழைநீர் கூடுதல் வரத்து ஆதாரமாக இருந்தது.

3 சதுர கிலோ மீட்டர் வரை நீர்பிடிப்பு பகுதியாக கொண்டு உருவாக்கப்பட்டு இருந்தது. இந்த மறுகால் மூலம் சுற்றியுள்ள பாசன நிலங்களுக்கு தண்ணீர் திறப்பு வழித்தடங்கள் உள்ளன.

இதன் மறுகால் வழியே ஆரியநல்லுார் குளத்திற்கும் கொடக நாட்டை சென்றடைவதற்கான வாய்க்கால்கள் ஏற்படுத்தப்பட்டு இருந்தது.

சுற்றி யு ள்ள 60 ஏக்கருக்கும் கூடுதலான நிலங்கள் நேரடியாகவும், 40 ஏக்கருக்கும் கூடுதலான நிலம் மறைமுக பாசன வசதியும், நிலத்தடி நீராதரமாகவும் கொண்டுள்ளன.

பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி வரத்து வாய்க்கால், கண்மாயின் நீர் தேங்கும் பகுதிகளில் மண் மேவியுள்ளது. வரத்து வாய்க்காலின் பெரும்பகுதி ஆக்கிரமிப்புகளில் சிக்கியுள்ளன. ரியல் எஸ்டேட் நபர்களால் வழித்தடம் கபளீகரம் செய்யப்பட்டு தடைபட்டுள்ளது.

சில ஆண்டுகளாக வறட்சி நீடிக்கும் இக்கண்மாய்க்கு தொடர் மழை நேரங்களில் கூட தண்ணீர் வரத்து இல்லை. இப்பகுதியில் சீமைக்கருவேல மரங்கள், புதர்ச்செடிகள் அடர்ந்துள்ளன.

கண்மாய் முழுவதுமாக துார்ந்த நிலையில் பெயரளவில் ஆவணங்களில் மட்டுமே நீராதாரமாக இடம் பெற்றுள்ளது.

இதனை மேம்படுத்தி இப்பகுதியின் நிலத்தடி நீராதாரத்தையும், சாகுபடி வளத்தையும் மீட்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.

--நிலத்தடிநீர் பாதிப்பு கோவிந்தராஜ், விவசாயி, கலிக்கம் பட்டி: 20 ஆண்டுகளுக்கு முன் வரை இங்கு அதிக அளவு வரத்துநீர் தேங்கிய சூழலில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர், விவசாய சாகுபடி பணிகள் தொய்வின்றி நடந்தது. பராமரிப்பில் உள்ளாட்சி அமைப்புகளின் அலட்சியத்தால் தற்போது சீமை கருவேல முட்கள், புதர் செடிகள் பரவலாக வளர்ந்துள்ளன. சிலர் கண்மாய்க்கு வரும் பாதையை மறித்து ஆக்கிரமித்துள்ளதால் வழித்தடமின்றி வரத்து நீர் வீணாகிறது. இக்கண்மாய் தொடர்ந்து வறண்டு கிடப்பதால் கலிக்கம்பட்டி, கோட்டைப்பட்டி பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் 800 அடிக்கும் கீழே சென்றுவிட்டது.

--மீட்க நடவடிக்கை பாண்டி, கூலித்தொழிலாளி, கலிக்கம்பட்டி: இக்குளத்திற்கான வரத்து வாய்க்கால் மட்டுமின்றி மறுகால் தண்ணீர் வெளியேறும் பகுதிகளும் தனியார் ஆக்கிரமிப்புகளில் சிக்கி உள்ளன. கண்மாயில் நீர் தேங்கும் பரப்பின் பெரும்பகுதி ஆக்கிரமிப்புகளால் சுருங்கி கிடக்கிறது. மாவட்ட நிர்வாகம் சீமைக்கருவேல முட்களை அகற்றுவதுடன் குளத்தை முழுமையாக அளவீடு செய்து, ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்க வேண்டும்.

நிலத்தடி நீர் ஆதாரத்தை பாதுகாக்கும் நடவடிக்கையே தற்போதைய அவசியமாக உள்ளது.

சி று மலை வரத்து நீர் இக்கண்வாய்க்கு வந்து குடகனாற்றில் கலக்கும் வரையிலான வழித்தடத்தை மேம்படுத்துவதன் மூலம் மட்டுமே இப்பகுதியில் உள்ள 10க்கு மேற்பட்ட கிராமங்களில் குடிநீர், விவசாய பணிகளின் முந்தைய நிலையை மீட்டெடுக்க முடியும்.

Advertisement