புதிய 9 யூரியா ஆலைகள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

-நமது சிறப்பு நிருபர்-

நம் நாட்டில் யூரியா உற்பத்தியை அதிகரித்து, தன்னிறைவை எட்டும் நோக்கில் வகுக்கப்பட்டுள்ள, 'ஆத்ம நிர்பர் பாரத்' தேசிய யூரியா முதலீட்டு கொள்கை - 2026 திட்டத்திற்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்த புதிய முதலீட்டு கொள்கையின் கீழ், நாட்டில் இயற்கை எரிவாயு அடிப்படையிலான, 8 முதல் 9 புதிய யூரியா உற்பத்தி ஆலைகள் அமைக்க ஊக்குவிக்கப்படும். இதன் வாயிலாக, உள்நாட்டு யூரியா உற்பத்தி திறன் ஆண்டுக்கு ஒரு கோடி டன் அதிகரிக்கும்.

நாட்டின் யூரியா தேவையை உள்நாட்டு உற்பத்தி வாயிலாக பூர்த்தி செய்து, இறக்குமதி சார்பை குறைப்பது இதன் முக்கிய நோக்கம்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், 'கூடுதல் ஆலைகள் அமைக்கப் படுவதன் வாயிலாக, நாட்டின் முழு யூரியா தேவையையும் உள்நாட்டிலேயே பூர்த்தி செய்து, இறக்கு மதியை தவிர்க்க முடியும்,' என்றார்.

Advertisement