கொக்கிலமேடில் 8 குடும்பங்கள் பாதுகாப்பு கோரி போலீசில் மனு

மாமல்லபுரம்: கொக்கிலமேடு கிராம அம்மன் கோவில் திரு விழாவில் பங்கேற்க எட்டு குடும்பங்களுக்கு, மீனவ சபையினர் தடை விதித்துள்ளனர். ஊரில் இருந்து ஒதுக்கி வைத்துள்ளதோடு, அவ்வப்போது தங்கள் மீது தாக்குதல் நடத்துவதாக, அந்த குடும்பங்கள் சார்பில் போலீசில் மனு அளிக்கப்பட்டு உள்ளது.

--மாமல்லபுரம் அடுத்த எடையூர் ஊராட்சி, கொக்கிலமேடு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன்; மீனவர். இவரது மனைவி ராஜாத்தி, 2024ல் ஊராட்சி துணை தலைவராக இருந்தபோது, கழிவுநீர் வடிகால்வாயை உயர்த்தி கட்டினார். இதனால், ராஜாத்தியிடம் மீனவர்கள் சிலர் தகராறு செய்தனர்.

இதுகுறித்து அவர், மாமல்லபுரம் போலீசில் புகார் அளித்தார். மீனவ சபையினர் நெருக்கடி காரணமாக, புகார் மனுவை திரும்ப பெற்றார். சபையினர் நெருக்கடியால், ராஜாத்தி தற்கொலைக்கும் முயன்றார்.

தொடர்ந்து, மீனவ சமுதாய கட்டுப்பாட்டை மீறியதாக, ராஜாத்தி மற்றும் அவருக்கு ஆதரவாக இருந்த ஏழு குடும்பங்களை, ஊரில் இருந்து ஒதுக்கிவைத்து, மீனவர்கள் கட்டுப்பாடுகளை விதித்தனர். அதன்படி 27 பேர், ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளனர்.

இந்நிலையில், கொக்கிலமேடில் நடக்கவுள்ள அம்மன் கோவில் ஆடி உத்சவ விழாவில் ராஜாத்தி குடும்பத்தினர் உட்பட 27 பேரை பங்கேற்கவும் மீனவ சபையினர் தடை விதித்துள்ளனர்.

அவ்வப்போது ராஜாத்தி குடும்பத்தினர் மீது சிலர் தாக்குதல் நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. அதனால் ராஜாத்தி குடும்பத்தினர், தங்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி, மாமல்லபுரம் போலீசாரிடம், நேற்று மனு அளித்துள்ளனர்.

இதுகுறித்து, ராஜாத்தி கூறியதவாது:

இம்மாதம் 22ம் தேதி வரை, அம்மன் கோவிலில் ஆடி விழா நடக்கிறது. ஊரில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள எங்களை, திருவிழாவில் சேர்க்க மறுக்கின்றனர். அதுமட்டும் இல்லாமல், ஒரு சில கும்பல் எங்களை அவ்வப்போது தாக்குகின்றனர். இதுவரை 17 முறை தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஊர் கட்டுப்பாடு என்று கூறி சட்டத்திற்கு புறம்பாக செயல்படுகின்றனர். இதற்கு, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement