சதுரகிரியில் ஆடி அமாவாசை திருவிழா: ஏற்பாடுகள் தீவிரம்
மதுரை:சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா ஆக. 12ல் நடக்கிறது. இதனை முன்னிட்டு, ஆக.10 முதல் 13 வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்யவுள்ளனர். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் அன்பழகன் தலைமை வகித்தார்.
சிறப்பு ஏற்பாடுகள்
பக்தர்கள் காலை 6:00 மணி மாலை 4:00 மணி வரை மட்டுமே மலை ஏற அனுமதிக்கப்படுவர். தாணிப்பாறை வழித்தடத்தையே பயன்படுத்த வேண்டும். வாழைத்தோப்பு, வருஷநாடு உள்ளிட்ட ஆபத்தான பாதைகளை தவிர்க்க வேண்டும். கூட்ட நெரிசலின்றி சுவாமி தரிசனம் செய்ய, வெள்ளை பாறை வழியாக சுந்தரமூர்த்தி சன்னதி சென்று சுவாமி தரிசனம் செய்தபின், புதிய பாதை வழியாக சந்தன மகாலிங்க சுவாமியை தரிசித்து, இரும்பு பாலத்தின் வலது புறமாக வெளியேறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக குடிநீர் தொட்டிகள், சோலார் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. கோரக்கர், சங்கிலிப்பாறை உள்ளிட்ட முக்கிய இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மதுரை, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், சிவகாசி, டி.கல்லுப்பட்டி உள்ளிட்ட இடங்களில் இருந்து தாணிப்பாறை வரை சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.