மாநகராட்சியில் வேலை செய்ததற்கு பில் தொகை தாமதம்: டெண்டர் எடுக்க அளில்லை: ஒப்பந்ததாரர்கள் ஓட்டம் 

கடலுார் தேர்வு நிலை நகராட்சியாக இருந்தது கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.

மாநகராட்சிக்கு போதுமான அளவு பரப்பளவு இல்லாததால் சுற்றுப்பகுதியில் உள்ள 15க்கும் மேற்பட்ட கிராமங்கள் மாநகராட்சியில் இணைக்கப்பட உள்ளன.

தி.மு.க., வை சேர்ந்தவர் மேயர் பதவி வகித்து வருகிறார். மாநகராட்சியில் 25க்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள் பதிவு செய்துள்ளனர். கடந்த 4 ஆண்டுகளில் பல 100 கோடிக்கு மேல் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. தற்போது ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பின்னர் பணிகள் சரிவர நடைபெறவில்லை.

மாநகராட்சி பொறியாளர் பணியிடம் நீண்ட நாட்களாக காலியாக உள்ளது. அதனால் விழுப்புரத்தை சேர்ந்த பொறியாளர் கடலுார், திண்டிவனம் ஆகிய நகராட்சிகளையும் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார். பணிகளை டெண்டர் எடுத்த ஒப்பந்ததார்களுக்கு பணிகளை பார்வையிடுதல், ஒப்புதல் கொடுப்பதில் தாமதமாகி வருகிறது. பணிகள் முடித்து, 6 மாதங்களுக்குமேலாகியும் அதற்குரிய பில் தொகை வழங்கப்படுவதில்லை என்கிற குற்றச்சாட்டு உள்ளது.

பணி செய்ததற்கு பில் தொகை வழங்காமல் ஏற்படும் தாமதத்தால் ஒப்பந்ததாரர்கள் மாநகராட்சியில் பணி செய்ய விரும்பவில்லை. அதனால் அம்மா உணவகம் சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு டெண்டர் எடுக்க ஆளில்லாமல் போனது. கடந்த, 4 ஆண்டுகளில் 6 கமிஷ்னர்கள் மாற்றப்பட்டு, 7 வது கமிஷனராக கிஷன் குமார் பொறுப்பேற்றுள்ளார். மக்களுக்காக சேவை செய்ய வேண்டிய பணிகளான, நடைபாதை கடை அகற்றுதல், சாலையில் மாடு சுற்றி திரிவதற்கு அபராதம் விதித்தல், ஆக்கிரமிப்பு அகற்றுதல் போன்ற பணிகளில் கறாராக இருப்பதால் மக்கள் மத்தியில் கமிஷனர் வரவேற்பை பெற்றுள்ளார். இருப்பினும் அனைத்து துறைகளிலும் உள்ள குறைபாடுகளை சரி செய்து சென்றால்தான் மாநகராட்சி சிறப்பாக செயல்படும் என்பதில் ஐயமில்லை.

Advertisement