தனியார் நிறுவனம் ரூ.1,109 கோடி மோசடி: பல இடங்களில் சி.பி.ஐ., அதிரடி சோதனை

13

சென்னை: தனியார் நிறுவனம் ஒன்று, வங்கியில், 1,109 கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்தது தொடர்பாக, தமிழகம் உட்பட நான்கு மாநிலங்களில், பல இடங்களில், சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

ஒடிஷா மாநிலம் புவனேஸ்வரை தலைமையிடமாக வைத்து, 'குப்தா பவர் இன்ப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட்' என்ற நிறுவனம் செயல்படுகிறது. இதன் கிளைகள், தமிழகம், மேற்கு வங்கம், உத்தரகண்ட் உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் உள்ளன.

இந்த நிறுவனம், ஒடிஷாவில் உள்ள வங்கி ஒன்றில், 1,109 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்துள்ளது. இதுகுறித்து, சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அவர்கள் நேற்று முன்தினம், ஒடிஷா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள, தனியார் நிறுவனத்தின் இயக்குநர்கள் நான்கு பேரின் வீடுகள், தமிழகத்தில் திருவள்ளூர், ஒடிஷாவில் புவனேஸ்வர், உத்தரகண்ட் காஷிப்பூரில் உள்ள தொழிற்சாலைகள் உட்பட பல இடங்களில் சோதனை நடத்தினர்.

அப்போது, வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்தது தொடர்பான ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர். அதனடிப்படையில் தொடர் விசாரணை நடக்கிறது என, சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று அறிவித்தனர்.

Advertisement