தேயிலை ஏலம் ரூ.53 கோடிக்கு வர்த்தகம்

குன்னுார்: தென் மாநில அளவில் நடைபெற்ற, 29வது வார தேயிலை ஏலத்தில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வர்த்தகம் வளர்ச்சியை கண்டு உள்ளது.

குன்னுார், டீசர்வ், கோவை, கொச்சி என நான்கு தேயிலை ஏல மையங்களில் வாரந்தோறும் இரு நாட்கள் ஏலம் நடக்கிறது. தென் மாநில அளவில் நடந்த 29வது ஏலத்தில், 47.02 லட்சம் கிலோ தேயிலை வரத்து இருந்த நிலையில், 41.69 லட்சம் கிலோ விற்று, 52.96 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது.

கடந்தாண்டு, இதே காலக்கட்டத்தில் 43.65 லட்சம் கிலோ வந்ததில், 32.95 லட்சம் கிலோ விற்பனையாகி, 36.31 கோடி ரூபாய் மொத்த வருவாய் கிடைத்தது. இதை ஒப்பிடுகையில், நடப்பாண்டு 16.65 கோடி ரூபாய் வருவாய் உயர்ந்துள்ளது.

குன்னுார் ஏல மையத்தில் விற்பனையும், சராசரி விலையும் அதிகரித்து அபார வளர்ச்சிக்கு காரணமாக அமைந்தது. கொச்சி மற்றும் கோவை மையங்களும் விற்பனையளவில் வளர்ச்சியை எட்டின. 'டீசர்வ்' மையம் மட்டும் விற்பனை; வருவாயில் கடந்த ஆண்டை விட சற்று சரிவை சந்தித்தது.

Advertisement