ஆர்.பி.ஐ., சொல்லியும் கடன் வட்டியை சில வங்கிகள் குறைக்காதது ஏன்?
ஆர்.பி.ஐ., வட்டியை குறைக்கச் சொன்னாலும் சில தனியார் வங்கிகள் குறைப்பதில்லை. அதன் கட்டுப்பாட்டில் அவ்வங்கிகள் வராதா? அப்படியெனில் வட்டியை குறைக்க என்ன வழிகள் உள்ளன?
- ச.கண்ணன், திண்டுக்கல் ரிசர்வ் வங்கியின் 'ரெப்போ' விகிதம் என்பது ஒரு வழிகாட்டி மதிப்பு. அதற்கு மேல், ஒவ்வொரு வங்கியும் தம் செலவுகளுக்கு ஏற்ப, சற்று கூடுதலாக வட்டி விகிதங்களை நிர்ணயம் செய்து கொள்ளலாம். இதை ஆர்.பி.ஐ., அனுமதிக்கிறது.
வங்கிகள் பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டும்போது கூடுதல் வட்டி கொடுக்க வேண்டியிருப்பதால், கடனுக்கான வட்டி விகிதத்தை அவற்றால் குறைக்க முடிவதில்லை.
ஒருசில வங்கிகளில் நிதி, வணிக, மனிதவள நிர்வாகம் நன்றாக இருக்கும்; அவர்களுடைய வாராக்கடன் குறைவாக இருக்கும். இத்தகைய வங்கிகளால், கடனுக்கான வட்டி விகிதங்களை உடனுக்குடன் மாற்ற முடியும்.
ஒரு வங்கி வாடிக்கையாளராக, நீங்கள் எந்த வங்கி குறைந்த வட்டியில் கடன் தருகிறது என்பதை கவனித்து, அதற்கு ஏற்ப உங்கள் கடனை மாற்றிக் கொள்வதே புத்திசாலித்தனம். அல்லது இருக்கும் வங்கிக்குள்ளேயே வட்டி குறைக்கப்படுமானால், அதற்கான கன்வர்ஷன் கட்டணத்தை செலுத்தி வட்டியை குறைத்துக் கொள்ளலாம்.
இரு மாதங்களுக்கு முன்னர் சில்வர் இ.டி.எப்., மற்றும் தங்க இ.டி.எப்., ஆகியவற்றில் சிறிதளவு முதலீடு செய்துள்ளேன். தற்போதைய சூழ்நிலையில் முதலீட்டில் கொஞ்சம் நஷ்டம் உள்ளது. இரண்டு ஆண்டுகளில் முன்னேற்றம் இருக்குமா?
- மா.மணி, கோவை இந்த சரிவை புரிந்துகொள்ள, சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரத்தின் சில கசப்பான உண்மைகளை தெரிந்து கொள்ள வேண்டும். இந்த சரிவுக்கு முழு காரணம், அமெரிக்க டாலரின் ஆதிக்கமும், வட்டி விகிதங்களும் தான்.
அமெரிக்க மத்திய வங்கி தன் வட்டி விகிதங்களை உயர்ந்த நிலையிலேயே வைத்திருப்பதால், உலகம் முழுவதுமிருந்து முதலீடுகள் அதிக லாபத்தை தேடி, அமெரிக்க கடன் பத்திரங்களை நோக்கி போகின்றன. இதனால், டாலர் நன்கு வலுவடைகிறது.
டாலர் வலுவடையும்போது, எந்தவிதமான வட்டி வருமானமும் தராத தங்கத்தின் விலை, சர்வதேச சந்தையில் இயல்பாகவே சரியும். இது தான் இப்போது நடந்திருப்பது.
போர் பதற்றம் சற்று தணிந்திருப்பதால் தான், தங்கத்தின் விலை சந்தையில் சரிந்துள்ளது. போர் மேகங்கள் மீண்டும் சூழ்ந்தால், தங்கத்தின் விலை மீண்டும் எகிறும். தங்கத்தை விட வெள்ளி மிக அதிக ஏற்ற, இறக்கங்களை கொண்டது.
நீங்கள் இரண்டு ஆண்டுகள் வரை காத்திருக்க தயாராக இருப்பதால், தற்போது நஷ்டத்தில் உள்ள இ.டி.எப்., முதலீட்டை பதற்றப்பட்டு விற்றுவிட வேண்டாம். ஆனால், சந்தை ஒரு ஸ்திரத்தன்மைக்கு வரும் வரை, இவற்றில் புதிய முதலீடுகள் எதையும் செய்ய வேண்டாம்.
நாம் நகைக்கடை, ஹோட்டல்கள் போன்ற கடைகளில் செலுத்தும் ஜி.எஸ்.டி., வரி அனைத்தும் முறையாக அரசுக்கு சென்று சேர்கிறதா என்பதை எப்படி தெரிந்து கொள்வது? சிலர் போலி பில்கள் மூலம் ஏமாற்றுவதாக நினைக்கிறேன்.
- ரா.ரவீந்திரன், சென்னை ஜி.எஸ்.டி., வரி தொடர்பான பில் முறையானதா என்பதை உங்கள் ஸ்மார்ட் போனில் எளிதாக சரிபார்க்கலாம். உங்களுக்கு வழங்கப்படும் பில்லின் தலைப்பில், 'டேக்ஸ் இன்வாய்ஸ்' என்று அச்சிடப்பட்டிருக்க வேண்டும்.
அதற்கு பதிலாக, 'எஸ்டிமேட், கொட்டேஷன், பிரபார்மா இன்வாய்ஸ், பில் ஆப் சப்ளை' என்றெல்லாம் அச்சிடப்பட்டு, கூடவே ஜி.எஸ்.டி., வரி என்று தனியாக குறிப்பிடப்பட்டிருந்தால் கவனமாக இருக்க வேண்டும்.
குறிப்பாக, பில் ஆப் சப்ளையில் தனியாக ஜி.எஸ்.டி., வசூலிப்பது, விதிமுறைக்கு முரணானது. அப்படிப்பட்ட பில்லை ஏற்காமல், அது குறித்து விளக்கம் கேட்பது நல்லது.
உண்மையான ஜி.எஸ்.டி., பில்லில், 15 இலக்க ஜி.எஸ்.டி., பதிவு எண் கட்டாயம் இடம் பெற்றிருக்கும். தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் பொதுவாக 33 என்ற எண்ணில் தொடங்கும். 15 இலக்க ஜி.எஸ்.டி., எண் இல்லையென்றாலோ அல்லது அதன் வடிவமைப்பு சரியாக இல்லையென்றாலோ, கொஞ்சம் உஷாராக இருப்பது நல்லது.
www.g s t.gov.in சென்று Search Taxpayer Search by GSTIN/UIN என்ற பகுதியில், பில்லில் உள்ள 15 இலக்க ஜி.எஸ்.டி., எண்ணை பதிவிட்டால், அந்த நிறுவனத்தின் விபரங்கள் திரையில் தோன்றும்.
அவை உங்கள் பில்லில் உள்ள விபரங்களுடன் பொருந்துகிறதா என்பதை சரிபார்த்து கொள்ளலாம். இதற்காக, அதிகாரப்பூர்வ GSTN e-Services செயலியையும் பயன்படுத்தலாம்.
நான் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில், தபால் நிலையத்தில் 25 லட்சம் ரூபாய் போட்டு வைத்துள்ளேன்; அதற்கான வட்டி பெற்று வருகிறேன். என் அண்ணன், '10 லட்சம் ரூபாய் நான் தருகிறேன். அதை உன் சேமிப்பு கணக்கில் வைத்துக்கொள்; அவசர தேவைக்கு வாங்கிக் கொள்கிறேன்' என்று கூறுகிறார். இதனால், எனக்கு வருமான வரி அல்லது வேறு ஏதேனும் வரி பிரச்னைகள் வருமா? நான் இதுவரை வருமான வரி படிவம் கொடுத்ததில்லை. எனக்கு வேறு வருமானம் இல்லை.
- உஷா, சென்னை அண்ணனிடம் இருந்து பணம் வாங்குவதால், வருமான வரி சட்டப்படி சகோதரர் 'உறவினர்' என்பதால், அவரிடம் இருந்து பெறும் பரிசு தொகைக்கு வரி செலுத்த வேண்டாம். நீங்கள் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் கணக்கு வைத்துள்ளதால், உங்கள் வயது 60ஐ தாண்டியிருக்கும்.
ஏற்கனவே, 25 லட்சம் ரூபாயை மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் போட்டுஇ ருப்பதால், தற்போதைய 8.20 சதவீத வட்டியில், ஆண்டுதோறும் 2.05 லட்சம் ரூபாய் வட்டியாக வந்து கொண்டிருக்கும். உங்களுடைய அண்ணனுடைய பணத்தையும் சேர்த்தால், அதற்கும் தோராயமாக 30,000 ரூபாய் வட்டி கிடைக்கும்.
ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனி வரி வரம்பு கிடையாது; இருபாலருக்கும் ஒரே விதி தான். உங்கள் மொத்த ஆண்டு வருமானம், இந்த வட்டி வருமானம் மட்டுமே என்றால், வருமான வரி செலுத்த வேண்டிய நிலை தற்போது ஏற்பட வாய்ப்பில்லை.
ஆனால், வேறு சில விஷயங்களை கவனிக்க வேண்டும். உங்கள் அண்ணனிடம் இருந்து நீங்கள் 10 லட்சம் ரூபாயை ரொக்கமாக வாங்கக்கூடாது; காசோலையாகவோ, ஆன்லைன் பரிமாற்றம் வாயிலாகவோ மட்டும் வாங்க வேண்டும். 10 லட்சம் ரூபாயை ரொக்கமாக உங்கள் சேமிப்பு கணக்கில் செலுத்தினால், அது சிஸ்டத்தில் தானாகவே பதிவாகி, வருமான வரித்துறையின் கவனத்துக்கு போகும்.
நடைமுறை சிக்கல் ஒன்றையும் பார்த்து விடுவோம். நெருப்பென்றால் வாய் வெந்துவிடாது. ஒருவேளை உங்களுக்கு ஏதேனும் அசவுகர்யம் ஏற்பட்டால், உங்கள் நாமினிகள், உங்கள் அண்ணனுடைய பணத்தை அவருக்கு மீண்டும் திருப்பித் தர வேண்டும்.
அது சாத்தியமா; அதில் ஏதேனும் சிக்கல் வருமா என்றெல்லாம் யோசியுங்கள். எழுத்துப்பூர்வமாக இது அண்ணனுடைய பணம்; திருப்பித் தர வேண்டும் என்பதை பதிவு செய்து வைத்து கொள்ளுங்கள்.
அண்ணனுக்கு உதவி செய்கிறோம் என்ற எண்ணத்தில், பிற்காலத்தில் சிக்கல்கள் ஏற்பட்டு விடக்கூடாது அல்லவா?
மேலும்
-
உலக சாம்பியனை வரவேற்ற 20 லட்சம் பேர் * ஸ்பெயின் முழுவதும் கொண்டாட்டம்
-
பாட்மின்டன்: சிந்து 'நம்பர்-8' * உலக தரவரிசையில் முன்னேற்றம்
-
இரண்டாவது சுற்றில் அனாஹத் * உலக ஸ்குவாஷ் ஜூனியர் சாம்பியன்ஷிப்பில்...
-
இந்திய ஹாக்கி அணி அறிவிப்பு * உலக கோப்பை தொடருக்காக...
-
மாநகராட்சியில் வேலை செய்ததற்கு பில் தொகை தாமதம்டெண்டர் எடுக்க அளில்லை: ஒப்பந்ததாரர்கள் ஓட்டம்
-
சதுரகிரியில் ஆடி அமாவாசை திருவிழா: ஏற்பாடுகள் தீவிரம்