சாயத்தொழிலுக்கான பசுமை மையம்; திருப்பூரில் அமைக்க கோரிக்கை

திருப்பூர்: பின்னலாடை தொழிலில் சாயம் மற்றும் பிரின்டிங் துறையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல உதவும் பசுமை பதப்படுத்தும் உற்பத்தி திறன் மையத்தை திருப்பூரில் அமைக்க வேண்டும் என தொழில்துறையினர் மீண்டும் வலியுறுத்திஉள்ளனர்.

இது குறித்து தொழில்துறையினர் கூறியதாவது: மத்திய அரசு 80 சதவீதமும், மாநில அரசு 20 சதவீதமும் பங்களிக்கும் வகையில், 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பசுமை பதப்படுத்தும் உற்பத்தி திறன் மையம் அமைக்க கடந்தாண்டே நிதி ஒதுக்கப் பட்டுள்ளது. கோவையில் உள்ள தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி மையம் (சிட்ரா) இதை செயல்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவிலேயே வேறு எந்த ஜவுளி மையத்திலும் இல்லாத வகையில், 'ஜீரோ லிக்விட் டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பம் திருப்பூரில் முழுமையாக நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. துணிகளுக்கு சாயமிடுவதில் புதிய கண்டுபிடிப்புகள் அவசியமாக உள்ளன. இதற்கான ஆராய்ச்சி, தொழில்நுட்பத்தை ஒரே குடையின் கீழ் மேற்கொள்ளும் அமைப்பாக இந்த திறன் மையம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள்கூறினர்.

சாயம் மற்றும் பிரின்டிங் துறையினர் கூறியதாவது: பசுமை உற்பத்தி திறன் மையத்துக்கு தேவையான 2 ஏக்கர் நிலம் மற்றும் 33 ஆயிரம் சதுர அடி கட்டட வசதியை ஏற்படுத்தி தர தயாராக உள்ளோம். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உதவும் இந்த மையத்தை திருப்பூரிலேயே அமைக்க வேண்டும் என்று முதல்வரிடமும் கோரிக்கை விடுத்துஉள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement