பதவி பறிபோன திமுக விஐபி அமைச்சரை சந்திக்க வந்தது ஏன்?
மன்மோகன் சிங் அமைச்சரவையில் முக்கிய துறையின் இணை அமைச்சராக இருந்தவர் புதுச்சேரியைச் சேர்ந்த அந்த பிரபல எம்.பி. பிரதமர் அலுவலகம், பணியாளர் மற்றும் பயிற்சி துறை ( PMO, Deptt of Personnel & Training) ஆகிய துறைகளுக்கு இவர் இணை அமைச்சராக இருந்தார். இரண்டுமே பவர்புல் ஆன துறைகள். வழக்கமாக, இணை அமைச்சருக்கு அதிக வேலை இருக்காது. பைல்கள் எதையுமே சம்பந்தப்பட்ட துறையின் கேபினட் அமைச்சர்கள் தங்கள் கீழே பணியாற்றும் இணை அமைச்சர்களுக்கு அனுப்ப மாட்டார்கள்.
இருப்பினும் இவர் மீது பிரதமர் மன்மோகன் சிங் மதிப்பு வைத்திருந்தார். இதனால் இவருக்கு பைல்கள் அனுப்பப்பட்டன. இன்னொரு துறையின் கீழ் சிபிஐ வரும். அங்கு நடக்கும் விசாரணை தொடர்பான விவரங்கள் அனைத்தும் இவருக்கு தெரியும். ஒரு நாள் காலை சிற்றுண்டிக்கு வீட்டிற்கு என்னை அழைத்தார். சென்றேன். இருவரும் இட்லி, தோசை சாப்பிட்டுக்கொண்டே அரசியல் நிகழ்வுகளை அலசினோம்.
தமிழக மீனவர்கள் மீது தவறு
அப்போது தமிழக மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையால் தாக்கப்படுவது குறித்து பேச்சு திரும்பியது. இது குறித்து மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என கேட்டதற்கு, “ நமது வெளியுறவுத்துறை இது குறித்து இலங்கையுடன் பேசிக்கொண்டிருக்கிறது” என்றவர் ஒரு நொடி என்னைப் பார்த்தார். “ நம்ம மீனவர்கள் மீதும் தவறு உள்ளது…இலங்கை எல்லைக்கு போகாதே என்றால் அங்கேதான் மீன் கிடைக்கிறது என போகின்றனர்…
பிறகு இலங்கை கடல்பகுதிக்கு சென்று மீன் பிடிக்கின்றனர். இதை எப்படி இலங்கை பொறுத்துக்கொள்ளும்…அத்தோடு அங்குள்ள நம் தமிழ் மீனவர்களுக்கும் இவர்களால் பிரச்னை…அவர்களுடைய மீன்களை நம்ம ஆட்கள் பிடித்துவிடுகின்றனர்” என்றார் அவர். “இது அனைவருக்கும் தெரிந்ததுதான்…இருப்பினும் நீங்கள் ஏன் வெளிப்படையாக இதை சொல்லக் கூடாது” என கேட்டேன்.
என்னைப் பார்த்து சிரித்தார்
“ இதை வெளியில் சொன்னா எப்படி எங்களுக்கு மீனவர்கள் ஓட்டு கிடைக்கும்…அதனால் உண்மையை நாங்கள் தெரிந்திருந்தாலும் பொதுவெளியில் அதை சொல்ல முடியாது. என்ன செய்வது…எங்களுக்கு வேறு வழியில்லை “என சொன்னார்.
திமுக எம்பியின் திடீர் விஜயம்
காலை சிற்றுண்டியை முடித்துவிட்டு தமிழக அரசியல் குறித்தும் பேசினோம். பிறகு அவரிடம் நான் விடைபெற்றுக்கொண்டேன். என்னை வழியனுப்ப அறை வாசல் வரை வந்தார். அப்போது அமைச்சரின் பங்களாவிற்குள் ஒருவர் நுழைந்து கொண்டிருந்தார்.
நான் அவரைப் பார்த்தேன். அவரும் என்னைப் பார்த்தார். அமைச்சரும் அந்த நபரைப் பார்த்து ஆச்சர்யப்பட்டார். எனக்கும் ஆச்சர்யம். “நான் இவரை அழைக்கவேயில்லையே”என மெதுவாக என்னிடம் சொன்னார். இப்படி அதிரடியாக அமைச்சரின் வீட்டிற்குள் நுழைந்தவர் ஒரு பிரபல குடும்ப திமுக எம்பி. கட்சிக்குள் நடந்த பிரச்னை காரணமாக அவருடைய மத்திய அமைச்சர் பதவி பறிக்கப்பட்டிருந்தது.
அத்தோடு ஒரு சிபிஐ வழக்கிலும் அவர் சம்பந்தப்பட்டிருந்தார். நான் அலுவலகத்திற்கு கிளம்பிவிட்டேன். இரண்டு மணி நேரம் கழித்து அமைச்சரிடமிருந்து போன். “ஏதோ நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்வது சம்பந்தமாக என்னை சந்தித்தார்” என சொன்னார்.
இரண்டு அரசியல்வாதிகள் சந்தித்தால் வானிலை குறித்தா பேசுவார்கள்…நிச்சயம் அரசியல்தான். தவிர அமைச்சர் சிபிஐயை கண்காணிப்பதால் ஒரு வேளை அவர் வழக்கு சம்பந்தமாகவும் பேசியிருக்கலாம். என்ன பேசினார்கள் என்பது அந்த நாராயணுக்கே வெளிச்சம்.
இரண்டு பதவிகளால் பிரச்னை
மன்மோகன் சிங் பிரதமராக பதவியேற்று 2 ஆண்டுக்கும் குறைவாகவே ஆகியிருந்தன. மன்மோகன் சிங் அரசுக்கு வழி காட்ட தேசிய ஆலோசனைக் குழுவை (National Advisory Committee)அமைத்து அதன் தலைவராகவும் இருந்தார் சோனியா காந்தி.
ஒரு எம்பி ஆதாயம் தரும் பதவியில் இருந்தார் அவர் எம்பி பதவி பறிக்கப்படும் என்பது சட்டம். இரண்டு பதவிகளில் இருக்கக் கூடாது. தேசிய ஆலோசனைக் குழுவின் தலைவர் பதவி ஆதாயம் தரும் பதவி எனவே சோனியாவின் எம்பி பதவியிலிருந்து பதவி நீக்கம் செய்ய வேண்டும் என பாஜக மற்றும் எதிர்க்கட்சிகள் ஜனாதிபதியிடம் புகார் அளித்தன. இதை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பினார் ஜனாதிபதி.
அதிரடி செய்தி
2006…மார்ச் மாதம் 23ம் தேதி காலை 11 மணி. நண்பரிடமிருந்து போன்…” ஒரு பிரேக்கிங் நியூஸ்” என என் ஆவலை அதிகப்படுத்தினார். “சோனியா காந்தி தன் எம்பி பதவியை இன்று ராஜிநாமா செய்யப்போகிறார்…உங்கள் சேனலில் ப்ளாஷ் செய்துவிடுங்கள்” என சொல்லிவிட்டு போனை கட் செய்துவிட்டார்.
மேலே சொன்னது போல காங்கிரஸ் கட்சியை கவனிக்கும் என சக நிருபரிடம் இதைச் சொன்னேன். என்னைப் பார்த்து சிரித்துவிட்டு “இதெல்லாம் வெறும் வதந்தி” என ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.
ஆனாலும் அவருக்கு தெரிந்த கட்சி தலைவர்களிடம் பேசினார்…பிறகு…”நீங்கள் சொன்ன செய்தி தவறு” என்றார். நான் பதில் பேசாமல் அமைதியாக இருந்தேன். எங்கள் டிவி காங்கிரசுக்கு ஆதரவாக செயல்படுகிறது என ஏற்கெனவே ஒரு குற்றச்சாட்டு உண்டு…
எனக்கு தகவல் சொன்ன நண்பர் மறுபடியும் போன் செய்து…உங்கள் டிவியில் ப்ளாஷ் வரவில்லையே என கேட்டார். நடந்ததை அவரிடம் சொன்னேன். அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் எங்களின் போட்டி சேனலில் பிரேக்கிங் நியூஸ் -சோனியா காந்தி எம்பி பதவியை ராஜிநாமா செய்கிறார். அந்த சேனலுக்கு நண்பர் செய்தி சொல்லிவிட்டார் போலிருக்கிறது.
உடனே எங்கள் நியூஸ் ரூம் பரபரப்பானது. அந்த காங் நிருபரிடம் அனைவரும் கேட்க ஆரம்பித்துவிட்டனர். சக நிருபரோ மறுபடியும் யார் யாருக்கோ போன் செய்தார். “யாரும் இந்த செய்தியை உறுதிப்படுத்தவில்லை…எனவே ப்ளாஷ் செய்யவேண்டாம்” என சொல்லிவிட்டார்.
எந்த சேனல் சோனியாவின் ராஜிநாமா குறித்து செய்தி வெளியிட்டுக் கொண்டிருந்ததோ, அதன் ஆசிரியருக்கு பெரும் குழப்பம்…செய்தி தவறாகிவிட்டால் என்னாகும்? இப்படியே இரண்டு மணி நேரம் சென்றது.
சோனியாவின் செய்தியாளர் சந்திப்பு
திடீரென காங் அலுவலகத்திலிருந்து அழைப்பு…ஒரு முக்கிய பிரஸ் நீட் - 10, ஜன்பத்திற்கு வந்துவிடுங்கள் என்று. 10 ஜன்பத் சோனியா காந்தியின் அரசு பங்களா. உடனே ஏகப்பட்ட டிவி கேமராக்கள்…நேரடி தொலைக்காட்சி வேன்கள் என பெரும் கூட்டம். சரியாக 3 மணிக்கு சோனியா வந்தார்…பக்கத்தில் ராகுல்…சற்று தொலைவில் ப்ரியங்கா.
சோனியா பேச ஆரம்பிக்க வழக்கம் போல கேமராமேன், நிருபர்கள் கூட்டம் கூச்சல்.
"நான் சுயநல நோக்கங்களுக்காகவோ அல்லது தனிப்பட்ட ஆதாயங்களுக்காகவோ அரசியலுக்கோ, பொது வாழ்விற்கோ வரவில்லை.
தற்போது எழுந்துள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, செயல்படுவதுதான் சரி என்று படுகிறது. எனவே, நான் எனது மக்களவை (லோக் சபா) எம்பி பதவியையும், தேசிய ஆலோசனைக் குழுவின் தலைவர் பதவியையும் உடனடியாக ராஜினாமா செய்கிறேன்”
சோனியா காந்தியின் பேச்சு லைவ் ஆக டிவிக்களில் ஒளிபரப்பானது. இதன் பின்னர் காங் கட்சி செய்தி சேகரிக்கும் அந்த சக நிருபரை சந்திக்கும் போது அவர் அசடு வழிந்தார்.
- அ.வைத்தியநாதன்
அ.வைத்தியநாதன், 30 ஆண்டுக்கும் மேலாக டில்லியில் செய்தியாளராக பணியாற்றியவர்.
தொடர்புக்கு: mailto:vaithi@dinamalar.in
இவர் அசடு வழிந்த நிகழ்வை இவரது சக நிருபர்களை கேட்டால் தெரியும்.
நல்ல மலரும் நினைவுகள். Pl keep writing. Enjoy your retired life. Stay healthy
சோனியா ராஜினாமா செய்யாமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று சொல்லவில்லையே
நாராயணசாமி நாராயணசாமி நாராயணசாமி
மாறன்மேலும்
-
மக்கள்தொகை கணக்கெடுப்பு விழிப்புணர்வு பேரணி
-
54 ஊழியர்கள் நியமனத்தை ரத்து செய்ய ஏன் தாமதம்? கோர்ட் தீர்ப்பு வந்தும் மாநகராட்சி இழுபறி
-
குளத்தை ஆய்வு செய்யாமல் அதிகாரிகள் அளித்த பதிலை ஏற்க முடியாது! உண்மைக்கு மாறான தகவலால் விவசாயிகள் அதிர்ச்சி
-
பழங்குடியின மாணவர்களுக்கு சிங்கப்பெண் படை நேசக்கரம்
-
உலக சாம்பியனை வரவேற்ற 20 லட்சம் பேர்; ஸ்பெயின் முழுவதும் கொண்டாட்டம்
-
பிரதமர் இல்லத்தை முற்றுகையிட்ட ராகுல், பிரியங்கா கைது! டில்லியில் பதற்றம்