குளத்தை ஆய்வு செய்யாமல் அதிகாரிகள் அளித்த பதிலை ஏற்க முடியாது! உண்மைக்கு மாறான தகவலால் விவசாயிகள் அதிர்ச்சி
சூலூர்: 'சூலூர் குளங்களை நேரடியாக கள ஆய்வு செய்யாமல் நீர்வளத்துறை அதிகாரிகள் அளித்துள்ள பதிலை ஏற்க முடியாது,' என, விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
பல்லடத்தை சேர்ந்த தன்னார்வலர் வித்யபிரகாஷ், முதல்வரின் தனிப் பிரிவுக்கு அனுப்பிய மனுவில்,' சூலூரில் உள்ள சின்ன குளம் மற்றும் பெரிய குளத்தில் தேக்கப்படும் நீரால், சுற்றுவட்டாரத்தில் உள்ள பல நூறு ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெற்று வருகின்றன. பல ஆண்டுகளாக கழிவு நீர் தேக்கப்பட்டு வருவதால் கழிவுகள் படிந்துள்ளன.
இக்குளங்கள் தூர் வாரி, 30 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. இதனால், நிலத்தடி நீர் மட்டம் குறைந்து தற்போது, சின்ன குளம் தண்ணீர் இன்றி வறண்டு உள்ளது. போர்கால அடிப்படையில் குளத்தை தூர் வாரவும், வண்டல் மண் எடுக்க அனுமதியும் வழங்க வேண்டும்,' எனக்கோரியிருந்தார். இதற்கு பவானிசாகர் அணைக்கோட்ட நீர் வளத்துறை செயற்பொறியாளர் ஜெயப்பிரகாஷ் அளித்துள்ள பதில்:
நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சூலூர் பெரிய குளம் மற்றும் சின்னக் குளத்தில் வருடந்தோறும் நீர் இருப்பு இருந்தபடியால் நீண்ட காலமாக தூர் வார இயலவில்லை. நீர் இருப்பு குறையும் பட்சத்தில் விவசாய பயன்பாட்டுக்கு வண்டல் மண்ணை வழங்க, மாவட்ட அரசிதழில் ஆணை வெளியிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இரு குளங்களை தூர்வாரி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள திட்ட மதிப்பீடு, அரசுக்கு விரைவில் சமர்ப்பிக்கப்பட்டு, உரிய ஒப்புதல், நிதி ஒதுக்கீடு கிடைக்க பெற்றவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து விவசாயி ரவிக்குமார் கூறுகையில்,'தற்போது, சின்னக்குளம் தண்ணீர் இன்றி வறண்டுள்ளது. கால்நடைகள் சுற்றி திரிகின்றன. நீர் வளத்துறை அலுவலர்கள் கள ஆய்வு செய்துதான் உயர் அதிகாரிகளுக்கு பதில் அளித்துள்ளனரா என, சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் சின்னகுளம் தற்போது தண்ணீர் இல்லாமல் வறண்டு உள்ளது. உயர் அதிகாரிகள் நேரடியாக வந்து ஆய்வு செய்து, தூர் வார உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றார்.
மனுதாரர் வித்யபிரகாஷ் கூறுகையில்,' செயற்பொறியாளர் அளித்துள்ள பதில் ஏற்க முடியாததாக உள்ளது. சின்னக் குளம் வறண்டு ஆகாய தாமரைகள் கருகிவிட்டன. கள ஆய்வு செய்ய உயர் அதிகாரிகள் நேரடியாக வரவேண்டும். அப்போதுதான் உண்மை நிலவரம் தெரியும். இப்பிரச்னை குறித்து உரிய ஆதாரங்களுடன் மீண்டும் முதல்வரின் தனிப் பிரிவுக்கு புகார் மனு அனுப்பி உள்ளேன்,' என்றார்.
வறண்ட குளத்தில் தண்ணீர் இருப்பதாக, அதிகாரிகளின் கள ஆய்வறிக்கையில் உண்மைக்கு மாறான தகவல் அளிக்கப்பட்டுள்ளது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.