மஹாராஷ்டிராவில் கார் மீது டிரக் மோதிய விபத்தில் 5 பேர் பலி

நாக்பூர்: மஹாராஷ்டிராவில் கார் மீது டிரக் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து போலீசார் கூறியதாவது; வார்தா மாவட்டத்தில் உள்ள சம்ருதி விரைவுச்சாலையில் புல்காவ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக வந்த டிரக், காரின் பின்புறத்தில் வேகமாக மோதியுள்ளது. இதில், கார் அப்பளம் போல நொறுங்கியது. மேலும், டிரக்கில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஓட்டுநர் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். லாரியின் கிளீனர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும், தீயணைப்புத்துறையினரின் உதவியுடன் தீ அணைக்கப்பட்டது. மேலும், காரின் இடுபாடுகளில் சிக்கியவர்களின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, இவ்வாறு தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று அதிகாலை நேரத்தில் நிகழ்ந்துள்ளது. நள்ளிரவு நேரம், அதிகாலையில் வாகன பயணத்தை தவிர்ப்பது நல்லது. வாகனம் ஓட்டுபவர், தூக்க கலக்கத்தில் சற்று அசந்தாலும் பெரும் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த விபத்து அதிகாலை நேரத்தில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

Advertisement