எலும்புக்கூடாய் மின் கம்பங்கள் கிராம மக்கள் அச்சம்

திருப்புவனம், ஜூலை 23-

திருப்புவனம் வட்டாரத்தில் பெரும்பாலான மின் கம்பங்களில் சிமென்ட் பூச்சு உதிர்ந்து எலும்புக் கூடாய் காட்சியளிப்பதால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

திருப்புவனம் வட்டாரத்தில் 45 ஊராட்சிகளை சேர்ந்த 173 கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களுக்கு திருப்புவனம், பூவந்தி, திருப்பாச்சேத்தி, பொட்டபாளையம் உள்ளிட்ட இடங்களில் உள்ள துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. பெரும்பாலான இடங்களில் சிமென்ட், இரும்பு மின் கம்பங்கள் பொருத்தி 20 முதல் 30 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. வெயில் ,மழை காரணமாக மின் கம்பங்கள் பலவும் துருப்பிடித்து பூச்சுகள் உதிர்ந்து எலும்பு கூடாக காட்சியளிக்கின்றன.

மின்கம்பங்கள் அனைத்தும் மின்கம்பிகள் தயவால் தொங்கியபடியே உள்ளன. பெரும்பாலான மின் வழி தடம் நான்கு வழி சாலை, தேசிய நெடுஞ்சாலை, கிராமப்புற சாலைகள் ஆகியவற்றை ஒட்டியே அமைக்கப்பட்டுள்ளன. சாலையோரம் உள்ள இந்த மின்கம்பங்கள் எலும்பு கூடாக காட்சியளிப்பதால் அவ்வழியாக செல்லும் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். தற்போது காற்று வீசும் காலம் என்பதால் மின் கம்பங்கள் ஆடியபடியே உள்ளன. குறிப்பிட்ட கால இடைவெளியில் மின் கம்பங்களை மாற்ற வேண்டும். ஆனால் மின்வாரியம் மின்கம்பங்கள், மின்கம்பிகளை மாற்ற எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. கிராம மக்கள் புகார் தெரிவித்தாலும் கண்டுகொள்வதே இல்லை.

திருப்புவனம் அருகே கழுகேர் கடை கிராமத்தில் பல இடங்களில் மின் கம்பிகளும் மின்கம்பங்களும் சேதமடைந்துள்ளன. நான்கு வழி சாலையில் இருந்து கழுகேர்கடை செல்லும் வழியில் உயர் மின்னழுத்த கம்பிகள் செல்லும் மின் கம்பங்கள் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து சாலையோரம் அந்திரத்தில் தொங்கியபடியே உள்ளன . மாவட்ட மின்வாரியம் சேதமடைந்த மின் கம்பங்களையும் மின்கம்பிகளையும் மாற்றி அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement