பகுஜன் சமாஜ் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க தடை கோரிய மனு வாபஸ்

7


- டில்லி சிறப்பு நிருபர் -

பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க தடை கோரி, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, தமிழக அரசு வாபஸ் பெற்றது. இதனால், இவ்வழக்கு விரைவில் சி.பி.ஐ., வசம் ஒப்படைக்கப்பட உள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் , கடந்த 2024, ஜூலை 5ம் தேதி சென்னை, பெரம்பூரில் அவரது வீடு அருகே கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை தொடர்பாக, தமிழக அரசு விசாரணை நடத்தி வந்த சூழலில், ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், 'கொலை வழக்கில் ஆளுங்கட்சியினர் தலையீடு இருப்பதால், தமிழக போலீசாரின் விசாரணை நேர்மையாக நடக்க வாய்ப்பு இல்லை. எனவே, இவ்வழக்கை சி. பி.ஐ., வசம் ஒப்படைக்க வேண்டும்' என, குறிப்பிட்டிருந்தார்.

இந்த கோரிக்கையை ஏற்று, சி.பி.ஐ., விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அப்போதைய தி.மு.க., அரசு இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.


ஆட்சேபனை இல்லை



தமிழகத்தில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, முதல்வர் விஜய் தலைமையில் த.வெ.க., அரசு பொறுப்பேற்றதால், முந்தைய தி.மு.க., அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெற முடிவு செய்யப்பட்டது.
அதன்படி கடந்த வாரம், தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், 'வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெற விரும்புகிறோம். இவ்வழக்கை சி.பி.ஐ., விசாரிப்பதில் தமிழக அரசுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை' என , தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஒத்திவைப்பு



உச்ச நீதிமன்ற நீதிபதி கே.வி.விஸ்வநாதன் தலைமையிலான அமர்வில் இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மேல்முறையீட்டு மனுவை தமிழக அரசு முறைப்படி வாபஸ் பெற அனுமதி அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இவ்வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களின் ஜாமினை ரத்து செய்ய கோரி தாக்கல் செய்த மனுவையும் விசாரித்த நீதிபதிகள், 'இது குறித்து சி.பி.ஐ., பதில் அளிக்க வேண்டும்' என உத்தரவிட்டு, வழக்கை வரும் செப்., 2ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Advertisement