டிரம்ப் வீசிய குண்டு: சரியும் பார்மா பங்குகள் காத்திருப்பதா; முதலீடு செய்வதா?
அமெரிக்காவிற்குள் மருந்து உற்பத்தியை பெருக்கும் நோக்கில், அங்கு இறக்குமதி செய்யப்படும் 'ஜெனரிக்' மருந்துகளுக்கு வரி விதிக்கப்படும் என்ற அறிவிப்பை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' பக்கத்தில் வெளியிட்டார்.
இதன் காரணமாக, கடந்த இரண்டு நாட்களாக இந்திய பங்கு சந்தையில் மருந்து துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் பெரும் சரிவை சந்தித்து வருகின்றன. நேற்றைய முந்தைய தினம் 2 சதவீதத்துக்கு மேல் சரிந்த 'நிப்டி பார்மா' குறியீடு, நேற்று அதிகபட்சமாக 25,458.90 வரை சரிந்து நிலைபெற்றது.
பதற்றம் வேண்டாம்
பார்மா நிறுவனங்களின் பங்குகளில் இப்போது முதலீடு செய்யலாமா, என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும் என்பது குறித்து 'ஐதாட்பிஎம்எஸ்' நிறுவனர் ஷியாம் சேகர் கூறும்போது,
இந்திய உள்நாட்டு சந்தையை நம்பியுள்ள பார்மா நிறுவனங்களுக்கு புதிய வரியால் நேரடி பாதிப்பில்லை. ஆனால் அமெரிக்க சந்தையை நம்பியுள்ள பங்குகள் அழுத்தத்தை சந்திக்கலாம்.
எனவே, ஏற்றுமதியை மட்டுமே நம்பியுள்ள நிறுவனங்களை தவிர்த்து, உள்நாட்டு சந்தை மற்றும் சிறப்பு மருந்து வர்த்தகம் கொண்ட நிறுவனங்களை தேர்ந்தெடுப்பது பாதுகாப்பானது. பார்மா பங்குகளை வாங்கும் போது அவற்றின் மதிப்பீட்டில் கவனம் செலுத்த வேண்டும். ஆய்வு செய்யாமல் நீண்டகால நோக்கில் முதலீடு செய்வதை தவிர்க்கவும்.
நல்ல உள்நாட்டு நிறுவன பங்குகள் விலை சரியும் போது அதை முதலீட்டு வாய்ப்பாக பயன்படுத்தலாம். அதே வேளையில், நீண்டகால முதலீட்டாளர்கள் அவசரப்பட்டு பங்குகளை விற்க தேவையில்லை.
நிச்சயமற்ற தன்மை
உடனடி வரி உயர்வு இல்லாததால் அடுத்த 2 ஆண்டுகளுக்கு இந்திய மருந்து ஏற்றுமதிக்கு பாதிப்பில்லை. ஆனால் 2028க்கு பின் வரிகள் அமலானால் ஏற்றுமதி செலவு அதிகரித்து, லாப வரம்பு குறையும் அல்லது அமெரிக்காவில் ஆலை அமைக்க வேண்டிய சூழல் உருவாகி மூலதன செலவு அதிகரிக்கும்.
மேலும், அமெரிக்க கொள்கை மாற்றங்கள் குறித்த நிச்சயமற்ற தன்மையால் தொழில் தொடங்குவதில் தயக்கம் நிலவுகிறது. சந்தை சூழல் சீராகி நிறுவனங்கள் புதிய திட்டங்களை அறிவிக்கும் வரை சிறு முதலீட்டாளர்கள் சந்தையை உற்று கவனிப்பது அவசியம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நிறுவனத்தின்
மொத்த வருவாயில்
அமெரிக்காவின்
பங்களிப்பு
கிளாண்டு பார்மா
53 %
ஜைடஸ் லைப்சயின்சஸ்
44 %
லுாபின்
41 %
அரபிந்தோ பார்மா
43 %
டாக்டர் ரெட் டீஸ் லேபாரட்டரீஸ்
47 %
90%
அமெரிக்காவில் எழுதப்படும் மருந்து சீட்டுகளில் ஜெனரிக் மருந்துகளின் அளவு
30%
அமெரிக்க ஜெனரிக் மருந்துகளில் இந்தியாவால் வினியோகிக்கப்படுவது
ரூ.2,98,752 கோடி
2025-2026ல் இந்தியாவின் மொத்த மருந்து ஏற்றுமதி
ரூ.90,912 கோடி
2025--2026ல் இந்தியாவின் மருந்து ஏற்றுமதியில் அமெரிக்காவின் பங்கு
40-50%
இந்தியாவின் மொத்த மருந்து ஏற்றுமதியில் அமெரிக்காவின் பங்கு.


@block_B@ புதிய வரி திட்டத்தின் முக்கிய அம்சங்கள் பூஜ்ஜிய வரி: நடப்பு ஆண்டின் ஆகஸ்ட் 1ம் தேதி முதல், ஜூலை 2028 வரை இறக்குமதி செய்யப்படும் அனைத்து ஜெனரிக் மருந்துகளுக்கும் வரி கிடையாது. முதல் கட்ட வரி உயர்வு: வரும் 2028 ஆகஸ்ட் முதல் அமெரிக்காவில் ஆலை அமைக்காத நிறுவனங்களின் ஜெனரிக் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படும். இரண்டாம் கட்ட வரி உயர்வு: வரும் 2029 ஆகஸ்ட் முதல் இந்த வரி மேலும் உயர்த்தப்பட்டு 200 சதவீதமாக மாற்றப்படும். பிராண்டடு மற்றும் பேட்டன்டு மருந்துகள்: ஏற்கனவே ஏப்ரல் 2026ல் அறிவிக்கப்பட்டபடி, இவற்றுக்கு 100 சதவீதம் வரை வரிக்கான விதிகளில் எந்த மாற்றமும் இல்லை. block_B