போலீஸ் செய்திகள்

* குண்டர் சட்டத்தில் கைது மதுரை: கீரைத்துறை பாலாஜி 21. வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இவரை தல்லாகுளம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரி பரிந்துரைபடி குண்டர் சட்டத்தில் கைது செய்ய கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார்.

* கழிப்பறையில் தாக்குதல் மதுரை: கூடல்புதுாரைச் சேர்ந்தவர் முத்துக்குமார் 45. டவுன் பஸ்சில் பெரியார் பஸ் ஸ்டாண்டிற்கு வந்தவர், அருகில் உள்ள மாநகராட்சி கழிப்பறைக்கு சென்றார். அங்கிருந்த மேலவாசல் மண்ட மணி என்ற சபரி மணிகண்டன், ஏசு என்ற ஜேம்ஸ் ஆகியோர் பணம் கேட்டு ஆயுதங்களால் தாக்கினர். திடீர்நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

* காஸ் ‘லீக்’: மூதாட்டி பலி மதுரை: தெற்குமாசிவீதி குருவம்மாள் 79. சமையல் செய்துவிட்டு காஸை அணைக்காமல் வெளியே சென்றார். காஸ் ‘லீக்’ ஆனது தெரியாமல் மீண்டும் வந்து அடுப்பை பற்றவைத்தபோது தீப்பிடித்ததில் குருவம்மாள் காயமுற்றார். அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் இறந்தார்.

* கண்மாயில் மூழ்கி பலி மதுரை: கரிசல்குளம் கண்ணன் 32. நண்பர்களுடன் விளாங்குடி கண்மாயில் மீன் பிடித்தபோது நீரில் மூழ்கி இறந்தார். உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். கூடல்புதுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

* 373 கிலோ புகையிலை, குட்கா பறிமுதல் மதுரை: மேலஅனுப்பானடி பஸ் ஸ்டாப் பகுதியில் எஸ்.ஐ., பேரரசி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வில்லாபுரம் முரளிதரன் 51, முனிச்சாலை கார்த்திக் 32, ஆகியோர் விற்பனைக்காக கொண்டு வந்த 28 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

அதேபோல் உத்தங்குடி பகுதியில் எஸ்.ஐ., அனிதா தலைமையில் போலீசார் மேற்கொண்ட வாகன சோதனையில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட 345 கிலோ புகையிலை, குட்கா, கூல்லிப் உள்ளிட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக பரமக்குடி பாலாஜி 28, பாலமுருகன் 29, ஆகியோரை கைது செய்தனர். கார், டூவீலர் பறிமுதல் செய்யப்பட்டன.

* டாக்டரிடம் வழிப்பறி செய்தவர் கைது ––––––––––––(படம் உண்டு) வாடிப்பட்டி: விளாங்குடி வேல்முருகன் 34. ஓமன் நாட்டில் அரசு டாக்டராக உள்ளார். பரவை பவர் ஹவுஸ்சில் உள்ள உறவினர் வீட்டிற்கு டூவீலரில் சென்றுவிட்டு வைகை வடகரை ரோட்டில் வந்தார். அவரை வழிமறித்த பரவை அண்ணாநகர் சந்துரு 23, கத்தியை காட்டி மிரட்டி அலைபேசி, ரூ.1500 மற்றும் ஏ.டி.எம். கார்டு உள்ளிட்ட ஆவணங்களை பறித்துச் சென்றார். அவரை சமயநல்லுார் இன்ஸ்பெக்டர் ராஜதுரை, எஸ்.ஐ., ரவிச்சந்திரன் கைது செய்தனர்.

* கஞ்சாவுடன் 4 பேர் கைது எழுமலை: உத்தப்புரம் அருகே மலையடிவாரத்தில் தர்மர் 60, என்பவர் தோட்டத்தில் கஞ்சா விற்பதாக தகவல் கிடைத்து இன்ஸ்பெக்டர் இளவரசு தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர். அங்கிருந்த தர்மர், கீழத்திருமாணிக்கம் அய்யனார் 40, நல்லதாதுநாயக்கன்பட்டி முத்துக்குமார் 25, எழுமலை சதீஷ் 25 ஆகியோரிடம் ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, 4 பேரையும் கைது செய்தனர். கஞ்சா, 20 ஆயிரம் ரொக்கம், 2 டூவீலர்கள், 3 அலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

* 52 மதுபாட்டிலுடன் கைது ---------–––––––––(படம் உண்டு) அலங்காநல்லுார்: எஸ்.பி., தனிப்படை போலீசார் அலங்காநல்லுார் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். சிக்கந்தர் சாவடி பகுதியில் இருந்து டூவீலரில் சாக்கு மூடையில் மது பாட்டில்களுடன் வந்த நல்லையன் நாயக்கர் தெரு கண்ணன் மகன் விக்ரமை 19, கைது செய்தனர். 52 மதுபாட்டில்கள், டூவீலர் பறிமுதல் செய்யப்பட்டன. அலங்காநல்லுாரில் மது விற்கும் பெண்ணிற்காக வாங்கி வந்தது தெரிந்தது.

Advertisement