ஒரு சொட்டு நீர்கூட வராத ஓடையை துார்வார ரூ.5.25 கோடி

வாடிப்பட்டி: ஒரு சொட்டு நீர் வராத பரவை கண்மாயின் வரத்து ஓடையை ரூ.5.25 கோடியில் துார்வாரிய நீர் வளத்துறை மீது பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இக்கண்மாய்க்கு தேனுார் சேம்பர் வைகை ஆற்றில் இருந்து வரும் வரத்து ஓடையின் குறுக்கே நான்கு வழிச்சாலை செல்கிறது. இச்சாலையில் வைக்கப்பட்ட குழாய்கள் பழுதானதால் பாசன நீர் சாலையை கடக்க முடியாத நிலை உள்ளது. தற்காலிகமாக பயனற்ற இப்பாசன ஓடையை உரிய அளவீடு செய்யாமல், ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் நீர்வளத்துறையினர் துார்வாரியதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

ஊர்மெச்சிகுளம் பாலமுருகன் கூறியதாவது: மக்களின் நீராதாரங்கள், அதிகாரிகள், ஆட்சியாளர்களுக்கு நிதி ஆதாரமாக மாறி வருகிறது. முப்பது ஆண்டுக்கும் மேலாக நீர்வரத்து இன்றி துார்ந்து போன ஓடையில், அளவீடு செய்து ஆக்கிரமிப்பை அகற்றாமல் பணிகள் நடந்துள்ளன. இதனால் சமயநல்லுார், பரவை கண்மாய் வரை 4.5 கி.மீ., ஓடையின் பல இடங்களில் குறுகலாகவும், பணிகள் நடக்காமலும் உள்ளது.

தற்போது பெயரளவில் ஆழப்படுத்தினர். இந்த ஓடையின் நீர் 4 வழிச்சாலையை கடந்து செல்லாது என்பது தெரிந்தும், பணிகள் முடிந்த பின் 4 வழிச்சாலையின் குறுக்கே பாலம் கட்ட தேசிய நெடுஞ்சாலைக்கு கடிதம் வைத்துள்ளனர். இதனால் நிதியும் வீண். ஒரு சொட்டு நீரும் கண்மாய்க்கு வராது என்றார்.

உதவி செயற்பொறியாளர் மொக்கமாயன் கூறியதாவது: ஐம்பது ஆண்டுகளுக்குப் பின் ஓடையை துார் வாரியுள்ளனர்.

நான்கு வழிச்சாலை பணியின் போது எங்கள் துறை அனுமதி பெறாமல் குழாய்கள் வைத்துள்ளனர்.

பாலம் கட்டித்தர தேசிய நெடுஞ்சாலை துறைக்கும், பேரூராட்சி சாலை, கட்டடத்தை அகற்ற பேரூராட்சிக்கும் கடிதம் அனுப்பியுள்ளோம் என்றார்.

Advertisement