வறுமை 'விளையாடிய' போதும் விளையாட்டில் சாதித்த முரளி கிருஷ்ணன்: ஒரு ஹாக்கி வீரர் வென்ற கதை
''கொடியது கேட்கின் நெடியவெவ் வேலோய்.. கொடிது கொடிது வறுமைகொடிது; அதனினும் கொடிது இளமையில் வறுமை''
என அவ்வையார் முருகப்பெருமான் கேள்விக்கு பதிலாக பாடியுள்ளார்.ஆம்... இளமையில் வரும் வறுமை ஒருவரின் லட்சியங்களையும், நம்பிக்கையையும், ஆரோக்கியத்தையும் முற்றிலுமாக சிதைத்து விடுகிறது. இப்படியான சூழ்நிலையில் வளர்ந்த போதும் மன வலிமை, விடா முயற்சியால் பலர் விஞ்ஞானம், அரசியல், விளையாட்டு என தனக்கு பிடித்த துறையில் வெற்றிவாகை சூடி பிறருக்கு வழிகாட்டியாக திகழ்கின்றனர்.
அந்த வரிசையில் சிறுவயதில் தந்தை இறந்த பிறகு, சித்தாள் வேலைக்கு சென்ற தாயின் சொற்ப வருமானத்தில் குடும்பம் ஒரு வேளை சோற்றுக்கு சிரமப்பட்டு, வறுமையில் சிக்கிய போதும் மன வலிமையால் விளையாட்டு துறையில் கவனம் செலுத்தி தேசிய ஹாக்கி வீரராகி தற்போது தெற்கு ரயில்வேயில் பணிபுரிகிறார் ராமநாதபுரம் மாவட்டம் சக்கரகோட்டை கிராமத்தை சேர்ந்த முரளி கிருஷ்ணன். 23 வயதே ஆன துடிப்புள்ள இளைஞர்.
தினமலர் சண்டே ஸ்பெஷல் பகுதிக்காக இவர் கூறியது...
தந்தை பஞ்சநாதன் மின்சார வாரியத்தில் தற்காலிக வயர்மேனாக பணி புரிந்தார். நான் 3ம் வகுப்புபடிக்கும் போதே விபத்து ஒன்றில் முதுகுத் தண்டு வடம் நரம்பு பாதிக்கப்பட்டு 10 ஆண்டுகளாக படுத்த படுக்கையாகவே இருந்தார். நான் பிளஸ் 2 படிக்கும் போதே இறந்து விட்டார். அம்மா சுதா கட்டுமான சித்தாள் வேலை செய்து என்னையும், தங்கையையும் படிக்க வைத்தார்.
ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் போது உடற்கல்வி ஆசிரியர் தாமரைக்கண்ணன் என்னை ஹாக்கி அணியில் பங்கேற்று விளையாட ஊக்கப்படுத்தினார். சிரமப்பட்டு விளையாடிய எனக்கு பயிற்சியளித்தவர், தற்போதைய ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார். அப்போது அவர் ஹாக்கி பயிற்சியாளர். அவரின் வழிகாட்டுதலின் படி பயிற்சி பெற்று மண்டல அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான போட்டிகளில் வெற்றி பெற்றேன். அதன் பிறகு தமிழக அரசின் விளையாட்டு விடுதியான ராமநாதபுரம் ஹாக்கி விடுதியில் இடம் கிடைத்தது. பிளஸ் 2 வரை படித்தேன். 2019-20ல் ஜூனியர் பிரிவில் தேசிய போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. அப்போது கொரோனா பரவல் காரணமாக அந்த போட்டி ரத்தானது. அதன் பிறகு கோவில்பட்டி கல்லுாரியில் பி.எஸ்.சி., உடற்கல்வியியல் பட்டம் பெற்றேன். அங்கு உடற்கல்வி பயிற்சியாளர் முத்துக்குமாரிடம் பயிற்சி பெற்று தேசிய அளவிலான ஜூனியர் ஹாக்கிபோட்டிகளில் பங்கேற்றேன். சீனியர் பிரிவில் விளையாட 3 ஆண்டுகள் முயற்சி செய்து, தேசிய அணியில் 8 வது வரிசையில் விளையாட தகுதி பெற்றேன்.
உ.பி.,யில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் விளையாடினேன். போட்டி இல்லாத நேரங்களில் அம்மாவுடன் நானும் கட்டட வேலைக்கு செல்வேன். விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டில் தெற்கு ரயில்வேயில் தற்போது நிர்வாக பிரிவில் பொது உதவியாளர் வேலை கிடைத்து, மதுரையில் பணிபுரிகிறேன்.
ரயில்வே ஹாக்கி அணியில் விளையாடி வருகிறேன். இந்திய ஹாக்கி அணியில் இடம்பெற்று அதிலும் சாதனை புரிவது தான் எனதுலட்சியம் என்றார்.
இவரை வாழ்த்த... 90613 45951.