அவமானத்தை சாதனையாக மாற்றினேன் நந்தகுமார் ஐ.ஆர்.எஸ்.,
பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய சிறுவன்... குடும்ப வறுமையால் லாட்டரி சீட்டு விற்ற சிறுவன்... அதே நந்தகுமார் இன்று இந்திய வருவாய் துறையின் மூத்த ஐ.ஆர்.எஸ்., அதிகாரி.
போட்டித் தேர்வு மாணவர்களுக்கு வழிகாட்டியாகவும், ஊக்கமளிக்கும் பேச்சாளராகவும், பாடல்கள் மூலம் தன்னம்பிக்கை விதைப்பவராகவும் அறியப்படும் அவர், தனது வாழ்க்கைப் பயணம், வெற்றிக்கான பார்வை, இசை மீதான காதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக மனம் திறந்து பகிர்ந்தது..
லாட்டரி சீட்டு விற்ற சிறுவனை ஐ.ஆர்.எஸ்., அதிகாரியாக உயர்த்திய தருணம்...
2005ல் சிவில் சர்வீஸ் தேர்வில் வென்று, அன்றைய ஜனாதிபதி அப்துல்கலாமை சந்தித்தபோது, இதேகேள்வியை அவரும் கேட்டார். பள்ளியில் சக மாணவர்கள் முன், 'படிக்காத மாணவன் இவன்' என என்னை அவமானப் படுத்திய தருணம் தான் என் வாழ்வின் திருப்புமுனை. அப்போது, எனக்குள் சாதிக்க வேண்டும் என எழுந்தஎண்ணமே முன்னேற வைத்தது. நம் சிந்தனையை நல்ல வழியில் தீவிரமாக செலுத்தினால் போதும்; நம்மை அவமானப்படுத்திய அதே ஆட்கள் பாராட்டும் சூழல் அதுவாகவே அமையும்.
உங்களுக்கு மிகவும் பிடித்த புத்தகம்...
ரோண்டா பைரன் எழுதிய 'தி சீக்ரெட்'. 'நாம் ஆழமாக நம்பி நினைப்பதை அடைய முடியும்' என்ற அதன் சிந்தனை என்னை மிகவும் பாதித்தது. திருவள்ளுவர் கூறிய 'உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்' என்ற கருத்தையே அந்த நுால் வேறு கோணத்தில் சொல்கிறது. 'செயல்கள் இல்லாவிட்டாலும், சிந்தனையால் உலகை திரும்பி பார்க்க முடியும்' என்று நிரூபித்த ஸ்டீபன் ஹாக்கிங் புத்தகங்களும் பிடிக்கும்.
உங்கள் பாடல் திறமை பற்றி பலரும் பேசுகிறார்களே...
நான் மேடையில் பாட்டு பாடுவது பொழுதுபோக்கவோ, மன அழுத்தத்தைப் போக்கவோ அல்ல; பாட்டு பாடுவதை, ஆளுமையை வெளிப்படுத்தும் மொழியாக பார்க்கிறேன். மனப்பூர்வமாகப் பாடும்போது அந்த உணர்வு கேட்பவர்களையும் சென்றடைகிறது. இன்று அந்தப் பாடலே மாணவர்களை ஊக்கப்படுத்தும் ஒரு அடையாளமாக மாறியுள்ளது.
இளைஞர்களின் 'ரீல்ஸ்' மோகம் குறித்து...
இன்றைய நாகரிக உலகில் 'ரீல்ஸ்' பார்க்காமல் இருப்பது கடினம். அதே நேரத்தில், 'சோசியல் மீடியா' என்பது நேரத்தை வீணாக்க அல்ல; வாழ்க்கை முன்னேறுவதற்கு என்பதை இளைஞர்கள் உணருவது அவசியம்.
ஒரு நாள் முழுவதும் ஓய்வு கிடைத்தால் எப்படி செலவிடுவீர்கள்
எனக்குக் கிடைக்கும் ஓய்வு நேரத்தையும் மாணவர்களுடன் தான் செலவிட விரும்புகிறேன். அவர்கள் கல்வியில் மட்டுமல்ல, ஆளுமையிலும் முன்னேற வேண்டும் என்பதே என் விருப்பம்.
காலப்பயணம் செய்து, சிறுவயது நந்தகுமாரை சந்திக்க நேர்ந்தால்...
'உன்னை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதே; என்ன நடந்தாலும் உன் கனவை மட்டும் கை விடாதே' என்பேன். என் சிறு வயதில் பள்ளி சீருடை அணிந்து படிக்க முடியாத ஏக்கம் இன்னும் இருக்கிறது. ஆனால் அந்த ஏக்கம்தான் இன்று ஆயிரக்கணக்கான மாணவர்களை ஊக்கப்படுத்தும் சக்தியாக மாறியுள்ளது.
உங்கள் வாழ்வில் எதை வெற்றியாக பார்க்கிறீர்கள்
ஒருவருக்கு பதவி, பணம், புகழ் என எல்லாம் இருந்தாலும், மனநிறைவு மட்டுமே உண்மையான வெற்றியை கொடுக்கும். நான் மேடையில் பேசியதை கேட்டு, மாணவர்கள் 'நாங்களும் சாதிப்போம்' என நம்பிக்கையுடன் சொல்லும்போது கிடைக்கும் மனநிறைவு வேறு எதிலும் கிடைக்காது. பிறருடைய வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறோம் என்ற உணர்வே எனக்கு மிகப்பெரிய வெற்றி.
instagram: Nandakumar IRS