லால் பகதூர் முதல் தர்மேந்திர பிரதான் வரை: இந்தியாவில் மத்திய அமைச்சர் பதவி விலகல்களின் வரலாறு!

18



நமது சிறப்பு நிருபர்




நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக நாடு தழுவிய அளவில் நடந்த போராட்டத்தால் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று (ஜூலை 25) ராஜினாமா செய்தார்.

இந்தியாவில் கடந்த காலங்களில் இதுபோன்ற மத்திய அமைச்சர்கள் யார் யார் பதவியை ராஜினாமா செய்தனர், பதவி விலகலுக்கான காரணம் குறித்து ஓர் சிறப்பு அலசல்.

* லால் பகதூர் சாஸ்திரி, நவம்பர் 1956 (காங்கிரஸ்)


காரணம்: 150க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கக் காரணமான அரியலூர் ரயில் விபத்திற்குத் தார்மீகப் பொறுப்பேற்று, அவ்விபத்திற்குப் பிறகு ரயில்வே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

* டி.டி. கிருஷ்ணமாச்சாரி, பிப்ரவரி 1958 (காங்கிரஸ்)

முந்த்ரா நிதி ஊழல் காரணமாக நிதி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

* வி.கே. கிருஷ்ண மேனன் நவம்பர், 1962 (காங்கிரஸ்)

1962ல் சீனாவுடனான போரின்போது இந்தியாவின் ராணுவத்தை தயார்படுத்தவில்லை என குற்றச்சாட்டிற்கு பிறகு, பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

* வி.பி. சிங், ஏப்ரல், 1987 (காங்கிரஸ்)

எச்.டி.டபிள்யூ நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தம் மற்றும் பேர்பாக்ஸ் விவகாரம் போன்ற பாதுகாப்பு ஒப்பந்தங்கள் குறித்து எழுந்த சர்ச்சைகளுக்கு மத்தியில், பிரதமர் ராஜிவ் அமைச்சரவையிலிருந்து வி.பி. சிங் பதவியை ராஜினாமா செய்தார்.

* மாதவராவ் சிந்தியா, ஜனவரி 1993 | காங்கிரஸ்

குத்தகைக்கு எடுக்கப்பட்ட ரஷ்யாவின் Tu-154 விமான விபத்திற்கு தார்மீகப் பொறுப்பேற்றதால், மத்திய சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

* நிதிஷ் குமார், ஆகஸ்ட் 1999 (Samata Party)

மேற்கு வங்கத்தில் 290 பேர் உயிரிழந்த கைசல் ரயில் விபத்திற்குப் பிறகு, தார்மீகப் பொறுப்பேற்று, ரயில்வே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

* சிவராஜ் பாட்டீல், நவம்பர் 2008 (காங்கிரஸ்)

பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை தோல்விகள் குறித்த விமர்சனங்களுக்கு மத்தியில், 26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பிறகு உள்துறை அமைச்சர் பதவியை சிவராஜ் பாட்டீல் ராஜினாமா செய்தார்.

* ஆ.ராஜா, நவம்பர் 2010 (திமுக)

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கி, தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பதவியை ஆ.ராஜா ராஜினாமா செய்தார்.

* தயாநிதி மாறன், ஜூலை- 2011 (திமுக)

தயாநிதி மாறன் தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது (2004-2007), ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மலேசியாவின் மேக்ஸிஸ் குழுமத்திற்கு விற்கும்படி வற்புறுத்தியதாக சிபிஐ குற்றம் சாட்டியது. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு மற்றும் ஏர்செல்-மேக்சிஸ் விவகாரத்தில் ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக, மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

* பவன் குமார் பன்சால், மே 2013 (காங்கிரஸ்)

தனது மருமகன் விஜய் சிங்லா சம்பந்தப்பட்ட ஒரு பெரும் ஊழல் வழக்கு காரணமாக மத்திய ரயில்வே அமைச்சர் பதவியை பவன் குமார் பன்சால் ராஜினாமா செய்தார்.

* அஸ்வனி குமார், மே- 2013 (காங்கிரஸ்)

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு சிபிஐ விசாரணை அறிக்கையை பகிர்ந்து கொண்ட விவகாரத்தில் பெரும் சர்ச்சை எழுந்து, மத்திய சட்டத்துறை அமைச்சர் பதவியை அஸ்வனி குமார் ராஜினாமா செய்தார்.

* எம்.ஜே. அக்பர், அக்டோபர்- 2018 (பாஜ)

பாலியல் சீண்டல் புகார் காரணமாக மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சராக இருந்த எம்.ஜே. அக்பர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

* தர்மேந்திர பிரதான், ஜூலை- 2026 (பாஜ)

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு சம்பவத்தை தொடரந்து வெடித்த போராட்டங்களைத் தொடர்ந்து, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

Advertisement