அ.தி.மு.க., மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனையில் பங்கேற்காதவர்களை நீக்க இபிஎஸ் திட்டம்: ஆகஸ்டில் செயற்குழுவை கூட்ட முடிவு

சென்னை: அ.தி.மு.க., மாவட்ட நிர்வாகிகளுடன் நடத்திய ஆலோசனை நிறைவடைந்த நிலையில், அதில் பங்கேற்காதவர்களை நீக்க, அக்கட்சி பொதுச்செயலாளர் இபிஎஸ் முடிவு செய்துள்ளார். தொடர்ந்து, கட்சியின் செயற்குழுவை கூட்டவும் திட்டமிட்டு இருக்கிறார்.

அ.தி.மு.க.,வில் அமைப்பு ரீதியாக, 85 மாவட்டங்கள் உள்ளன. சட்டசபை தேர்தல் தோல்வி தொடர்பாக, ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளையும் இபிஎஸ் அழைத்து ஆலோசனை நடத்தினார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள, கட்சி தலைமை அலுவலகத்தில், கடந்த ஜூன் 13ல் தொடங்கிய, ஆலோசனைக் கூட்டம், நிறைவடைந்தது.

ஆலோசனையில், அதிருப்தி அணியாக செயல்படும், முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், சண்முகம், தங்கமணி உள்ளிட்டோர் கலந்து கொள்ளவில்லை. அருண்மொழிதேவன், சுகுமார், ராகேஷ் உள்ளிட்ட எம்.எல்.ஏ.,க்களும் பங்கேற்கவில்லை. அதே நேரத்தில், அதிருப்தி அணியில் இருந்த, ஹரிபாஸ்கர், ஹரி, மோகன் உள்ளிட்ட எம்.எல்.ஏ.,க்கள், இபிஎஸ் கூட்டத்தில் பங்கேற்றனர்.

அ.தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:

உள்ளாட்சி தேர்தலை மையமாக வைத்து, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. 'உள்ளாட்சி தேர்தலில், அதிக இடங்களை கைப்பற்ற, என்ன வேண்டுமென்றாலும் செய்யுங்கள்' என, மாவட்டச் செயலர்களுக்கு இபிஎஸ் அதிகாரம் வழங்கி உள்ளார்.

முக்கிய நிர்வாகிகள் அனைவரும், தேர்தலில் போட்டியிட வேண்டும் எனவும் கூறி உள்ளார். இனி, உள்ளாட்சி தேர்தலை மையமாக வைத்தே, அ.தி.மு.க., செயல்பாடு இருக்கும். ராஜினாமா செய்த 6 எம்.எல்.ஏ.,க்களின் தொகுதிகளிலும், இடைத்தேர்தல் பிரசாரத்தையும் இபிஎஸ், விரைவில் தொடங்க உள்ளார்.

தனக்கு எதிரான நிர்வாகிகள் பட்டியலை, இந்த ஆலோசனை கூட்டங்கள் வழியே, பழனிசாமி எடுத்துள்ளார். பங்கேற்காத நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்கப்படுகிறது. அதிருப்தியாளர்களிடம் பேச்சு நடத்தப்படுகிறது. உடன்படாத நிர்வாகிகளை, கட்சி பொறுப்பிலிருந்து நீக்கும் பணி, ஓரிரு நாளில் தொடங்க உள்ளது.

அந்த பணிகள் நடக்கும்போதே, புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படுவர். அதைத்தொடந்து, ஆகஸ்ட் மாதம் அ.தி.மு.க., செயற்குழுவை கூட்ட இபிஎஸ் ஆயத்தமாகி வருகிறார்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement