திமுக எம்எல்ஏ வைத்திலிங்கத்திற்கு எதிரான ஊழல் வழக்கு; மேல் விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதி

8

சென்னை: முன்னாள் அமைச்சரும், திமுக எம்எல்ஏவுமான வைத்திலிங்கம் மீதான ஊழல் வழக்கில் மேல் விசாரணை நடத்தி 3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் அமைச்சரான வைத்திலிங்கம், அதிமுக இரு அணிகளாக பிளவுபட்ட போது, ஓபிஎஸ் அணியில் இடம்பெற்றிருந்தார். இதைத்தொடர்ந்து, கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பாக திமுகவுக்கு தாவினார். இவர் சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

திமுக எம்எல்ஏவான வைத்திலிங்கம், 2011-2016ம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தபோது, அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு ரூ.28 கோடி லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. அதன்பேரில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். கடந்த ஆட்சியில் இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

இந்த சூழலில், வைத்திலிங்கத்துக்கு எதிரான ஊழல் வழக்கில் மேல் விசாரணை நடத்த அனுமதி கோரி லஞ்ச ஒழிப்புத்துறை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இதனை விசாரித்த நீதிபதி, மேல் விசாரணைக்கு அனுமதியளித்ததுடன், 3 மாதங்களுக்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, வைத்திலிங்கத்துக்கு எதிரான அடுத்தகட்ட விசாரணையை லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கொள்ள இருக்கிறது.


பிரத்யேக வீடியோ!

கோர்ட் போட்ட உத்தரவால் திமுக எம்எல்ஏவுக்கு அதிர்ச்சி; பின்னணி குறித்து தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement