போராட்டம் நடக்கிறது என்பதால் தடியடி நடத்தக்கூடாது: சுப்ரீம்கோர்ட் கண்டிப்பு

65



நமது டில்லி நிருபர்




அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமை; அதை மறுக்க முடியாது என டில்லி போராட்டத்தில் இளைஞர்கள் மீதான தடியடி சம்பவத்திற்கு சுப்ரீம்கோர்ட் கண்டனம் தெரிவித்தது.

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சிஜேபி எனப்படும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற இயக்கத்தினர், டில்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒட்டுமொத்த டில்லியே ஸ்தம்பித்தது. பல்வேறு இடங்களில் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கூட்டத்தை பாதுகாப்பு படையினர் கலைத்தனர்.

இளைஞர்கள் மீதான தடியடி சம்பவத்திற்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று (ஜூலை 27) சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ''அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமை; அதை மறுக்க முடியாது. போராட்டம் நடைபெறுகிறது என்பதற்காகவே தடியடி நடத்துவது ஏற்க முடியாது'' என தலைமை நீதிபதி சூர்ய காந்த் தெரிவித்தார்.

மேலும் நீதிபதிகள் கூறியதாவது:

* போலீசாரின் அடக்குமுறையை நியாயப்படுத்த முடியாது. இளைஞர்கள் மீதான தடியடி சம்பவம் குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது நாளை விசாரணை நடத்தப்படும்.

* போராட்டத்தை போலீசார் கையாள்வது தொடர்பாக தேசிய அளவில் வழிகாட்டுதல்கள் தேவை.

* போலீசார் வரம்பு மீறி பலத்தை பயன்படுத்துவதை ஏற்க முடியாது.

* மாணவர்கள் மட்டுமின்றி பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் உட்பட ஒவ்வொரு தனிநபரின் உயிரும் சமமான முக்கியத்துவம் வாய்ந்தது.

இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.


பிரத்யேக வீடியோ!

மாணவர்கள் மீது தாக்குதல்: போலீசுக்கு நீதிபதிகள் கண்டனம் குறித்து தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement