சாலையோர தடுப்புச்சுவரில் முகாமிடும் சிறுத்தையால் பீதி

வால்பாறை: வால்பாறையில், பகல் நேரத்தில் எஸ்டேட் பகுதியில்  சிறுத்தை, யானை, காட்டுமாடு போன்ற வனவிலங்குகள் நடமாடுவதால், தொழிலாளர்கள் பீதியடைந்துள்ளனர்.

இந்நிலையில், வால்பாறையிலிருந்து அட்டகட்டி வரையிலான ரோட்டில் சமீப காலமாக யானையை தொடர்ந்து சிறுத்தைகளும் அதிகளவில் சுற்றுகின்றன. குறிப்பாக, வால்பாறை நகர், புதுத்தோட்டம், ரொட்டிக்கடை, அய்யர்பாடி பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் காணப்படுகிறது.

மாலை நேரங்களில், வால்பாறை – பொள்ளச்சி செல்லும் ரோட்டில் உள்ள தடுப்புச்சுவர் மீது சிறுத்தை அமர்ந்திருப்பதை, சுற்றுலா பயணியர் பார்த்துள்ளனர். அதை போட்டோ மற்றும் வீடியோ எடுத்து, சமூகவலைதளத்தல் பதிவிட்டுள்ளனர்.

வனத்துறையில் கூறுகையில், ‘வால்பாறை – ஆழியாறு ரோட்டில் பல்வேறு இடங்களில் சாலையோரம் சிறுத்தைகள் முகாமிடுகின்றன. அதனால், சுற்றுலா பயணியர் மிகவும் கவனமாக வரவேண்டும். சிறுத்தை நடமாடும் பகுதியில் மக்கள் மாலை நேரத்தில்  தனியாக நடந்து செல்வதை தவிர்க்க வேண்டும்,’ என்றனர்.

Advertisement