திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணில் தீபம் அவமதிப்பு வழக்கில் அதிகாரிகள் மேல்முறையீடு; ஐகோர்ட் கிளை ஒத்திவைப்பு

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணில் தனி நீதிபதியின் உத்தரவுப்படி தீபம் ஏற்றாததால் தாக்கலான நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு எதிராக, கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளின் மேல்முறையீட்டு மனுக்களை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இரு நீதிபதிகள் அமர்வு ஒத்திவைத்தது.

மதுரை மாவட்டம், எழுமலை ராம ரவிக்குமார் உள்ளிட்ட சிலர் தாக்கல் செய்த மனு அடிப்படையில் 2025 டிச., 1ல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், 'வழக்கமான இடங்களைத் தவிர, திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணிலும் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும்' என, உத்தரவிட்டார்.

இதற்கு எதிராக கோவில் செயல் அலுவலர், கலெக்டர் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கலாகின. ஜன., 6ல் இரு நீதிபதிகள் அமர்வு, 'தமிழ் மாதமான கார்த்திகையில் வரும் கார்த்திகை தீப திருவிழாவின் போது, கோவில் நிர்வாகம் தன் குழுவின் மூலம் தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும்' என, உத்தரவிட்டு மனுக்களை பைசல் செய்தது.

தீபத்துாணிலும் தீபம் ஏற்ற வேண்டும் என, டிச., 1ல் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாததால் தாக்கலான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 'தீபத்துாணில் ராமரவிக்குமார் தரப்பில் தீபம் ஏற்ற போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும்' என, டிச., 4ல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து, அப்போதைய கலெக்டர் பிரவீன்குமார், போலீஸ் கமிஷனர் லோகநாதன் இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தனர்.

மார்ச் 4ல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு:

நீதிமன்றம் நியமிக்கும் 5 பேர் கொண்ட குழுவை, தீபத்துாண் அமைந்துள்ள மலை உச்சிக்கு சென்று 15 நிமிடம் அடையாள வழிபாடு நடத்த அனுமதிக்கலாம் என பரிந்துரைக்கிறேன். மார்ச் 18 ல் போலீஸ் அதிகாரிகள் (கமிஷனர் லோகநாதன், துணை கமிஷனர் இனிகோ திவ்யன்) தகுந்த பதில் அளிக்காவிடில் அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும். அவர்கள் ஆஜராக வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து லோகநாதன், இனிகோ திவ்யன், கோயிலின் தற்போதைய செயல் அலுவலர் ஞானசேகரன் மேல்முறையீடு செய்தனர். திருப்பரங்குன்றம் ஹஸ்ரத் சுல்தான் சிக்கதர் பாதுஷா அவுலியா தர்கா செயலர் ஆரிப்கான், ‛எங்களை ஒரு தரப்பாக சேர்க்காமல், விளக்கமளிக்க வாய்ப்பளிக்காமல் உத்தரவு பிறப்பிக்க முடியாது. தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அவமதிப்பு வழக்கை வேறு நீதிபதியின் விசாரணைக்கு மாற்ற வேண்டும்' என மனு செய்தார்.இம்மனுக்களை ஜூன் 22ல் இரு நீதிபதிகள் அமர்வு விசாரித்தது.

தமிழக அரசு தரப்பு, 'இந்நீதிமன்ற அமர்வின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது' என, தெரிவித்தது. நீதிபதிகள், 'தனி நீதிபதியின் உத்தரவிற்கு இடைக்கால தடை மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை நீட்டிக்கப்படுகிறது. விசாரணை ஜூலை 27க்கு ஒத்தி வைக்கப்படுகிறது' என்றனர். நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வு விசாரணையை, ஆக., 10க்கு ஒத்திவைத்தது.

Advertisement