முதல்வர் விஜய் வழங்கிய அரசு பணிகள் ரத்து!

6

மதுரை: கரூரில் நடந்த தமிழக வெற்றிக் கழக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, தமிழக அரசு வழங்கிய பணி நியமனத்தை ரத்து செய்து அதிரடியாக உத்தரவிட்ட உயர் நீதிமன்ற மதுரை கிளை, 'பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு திறன் வளர்ப்பு பயிற்சியை வழங்கி, அரசு உதவியிருக்கலாம்; அது, பணி வழங்குவதை விட பயனுள்ளதாக இருக்கும்' என, கருத்து தெரிவித்தது.

மதுரையைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி தீரன் திருமுருகன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:

கரூரில் 2025 செப்., 27ல், த.வெ.க., தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியாகினர். வழக்கு விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடக்கிறது.

முன் உதாரணம்




இறந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு, தமிழக அரசு சார்பில் ஜூலை 10ல், கரூரில் முதல்வர் விஜய் பணி நியமனம் வழங்கினார். கடந்த காலங்களில் கூட்ட நெரிசல் சம்பவம், தீ மற்றும் சாலை விபத்துகள், பிற துயர சம்பவங்களில் பலர் இறந்துள்ளனர்.

அப்போது, பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு அரசு பணி வழங்கவில்லை. கரூர் சம்பவத்திற்கு மட்டும் அரசு பணி வழங்குவது, சட்டத்திற்கு முரணானது. எதிர்காலத்தில் இதுபோன்ற துயர சம்பவங்கள் நிகழும் பட்சத்தில், இதை முன்னுதாரணமாக கொண்டு அரசு பணி கோர வாய்ப்புள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் கரூர் சம்பவ வழக்கு நிலுவையில் உள்ளது; அது, இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை, அரசு பணி நியமனம் வழங்க தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதே போல, மனிதநேய ஜனநாயக கட்சி மாநில துணை செயலர் சீனி அகமது, திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை சந்தோஷ் குமார் ஆகியோரும் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

இது தொடர்பாக, ஜூலை 10ல் நடந்த விசாரணையில், இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவில், 'பணி நியமன உத்தரவு வழங்கும் நிகழ்ச்சியை நடத்தலாம். ஆனால், இவ்வேலைவாய்ப்புகள் இந்நீதிமன்றத்தின் இறுதி உத்தரவை பொறுத்து அமையும்.

'மேலும், கருணை அடிப்படையில் வேலை வழங்குவதற்கான வழிகாட்டுதல்கள் என்னென்ன; அவை கரூர் சம்பவத்திற்கு பொருந்துமா என்பது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டது.

நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வு, இந்த வழக்கை நேற்று விசாரித்தது. மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் கிளீட்டஸ், முகமது ரஷீத், ராஜசெல்வன் ஆஜராகினர்.

தமிழக வருவாய்த்துறை செயலர் தாக்கல் செய்த பதில் மனு: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்களின் வாரிசுதாரர்கள் கோரிக்கையை ஏற்று, கருணை அடிப்படையில் பணி வழங்க அரசு கொள்கை முடிவு எடுத்தது.

நிவாரணம்




அதன்படி, கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 24 பேர், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த தலா இருவர் என, மொத்தம் 31 பேருக்கு பணி வழங்க, ஜூலை 6 மற்றும் ஜூலை 9ல் அரசாணைகள் வெளியிடப்பட்டன.

இவர்களின் கல்வி தகுதிக்கேற்ப வருவாய், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணி பின்னர் வரன்முறைப்படுத்தப்படும் என்ற நிபந்தனையுடன், தற்காலிக அடிப்படையில் கருணை பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் எதிர் கொள்ளும் துயரத்தை தணிக் கும் வகையில், நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அரசு கொள்கை முடிவு எடுத்தது.

இறந்த 41 பேர், 37 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களில் ஆறு குடும்பத்தினர் வேலைவாய்ப்பு பெற தகுதியற்றவர்களாகவோ அல்லது விருப்பமற்றவர்களாகவோ கண்டறியப்பட்டனர். மீதம், 31 குடும்பங்களில் ஒவ்வொன்றிலிருந்தும் தலா ஒருவருக்கு, தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது.

தமிழகத்தில், கருணை அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இத்தகைய பணி நியமனங்களுக்கு, பல முன்னுதாரணங்கள் உள்ளன.

துாத்துக்குடியில் 'ஸ்டெர்லைட்' ஆலை போராட்டத்தின் போது, துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட 20 பேருக்கு, கருணை அடிப்படையில் 2018ல் கிராம உதவியாளர் பணி வழங்கப்பட்டது. பின், 2021ல் அந்த 20 பேரில், 17 பேருக்கு அவர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ற பணிகள் வழங்கப்பட்டன.

மதுரை மாநகராட்சி கவுன்சிலராக இருந்த லீலாவதி கொலை செய்யப்பட்டார். அவரது மகளுக்கு, 2006ல் கருணை பணி வழங்கப்பட்டது. ஜாதி ரீதியான வன்முறை சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு, பல மாவட்டங்களில் கருணை பணி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

தள்ளுபடி




கரூர் கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் கொள்கை முடிவு, அரசியலமைப்பு சட்டத்திற்குட்பட்டே செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த மறுவாழ்வு திட்டம், சி.பி.ஐ., அல்லது நீதிமன்ற விசாரணையை பாதிக்கும் என்ற அச்சம் தேவையற்றது.

இவ்வழக்கு, பணியாளர் நியமனம் சம்பந்தப்பட்டது; இதை பொதுநல வழக்காக தாக்கல் செய்ய முடியாது. வழக்கு தொடர மனுதாரர்களுக்கு தகுதி இல்லை. இம்மனுக்கள் விசாரணைக்கு உகந்தவை அல்ல; தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்கள் வாதம்: கும்பகோணம் மகாமகம் திருவிழா கூட்ட நெரிசல் மரணம், சென்னை எம்.ஜி.ஆர்., நகரில் வெள்ள நிவாரணம் வழங்கும் போது கூட்ட நெரிசலில் மரணமடைந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இதுபோல் கருணை பணி நியமனம் வழங்கப் படவில்லை.

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் குழந்தைகள் பலியான விவகாரத்தில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு கருணை பணி நியமனம் வழங்கவில்லை. கரூர் கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு கருணை பணி வழங்கியது, சட்ட ரீதியாக ஏற்புடையதல்ல.

கொள்கை முடிவு




படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பிற்காக காத்திருக்கின்றனர். அரசின் இது போன்ற நடவடிக்கையால், அவர்களின் எதிர்காலம் பாதிக்கும். இவ்வாறு வாதிடப் பட்டது.

அரசு தரப்பு, 'கரூரில் கூட்டத்தினரை போலீசார் சரியாக கையாளாததால் நெரிசல் ஏற்பட்டது. இறந்தவர்கள் மீது தவறு இல்லை. அச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள்.

'அதனால், அவர்களுக்கு பணி வழங்கப்பட்டது. பொதுநல மனுக்கள் நிலைக்கத்தக்கவை அல்ல. அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது' என்றது.

டி.என்.பி.எஸ்.சி., தரப்பு, 'கருணை பணி நியமனத்தில் எங்களின் பங்களிப்பு எதுவும் இல்லை' என தெரிவித்தது.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: கரூர் கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு, 2025ல் தமிழக அரசு தலா, 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கியுள்ளது.

இச்சூழலில் அவர்கள் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ளதால், விதிவிலக்காக கருதி, கருணை பணி நியமனம் வழங்கியதாக அரசு தரப்பில் கூறுவது ஏற்புடையதல்ல. வழக்கு விசாரணை, உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் நடக்கிறது. இச்சூழலில் பணி நியமனம் வழங்கியது சரியல்ல.

வாகன விபத்து, பட்டாசு ஆலை விபத்துகளில் பாதிக்கப்படுவோருக்கு, இழப்பீடு மட்டுமே வழங்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு பணி எதுவும் வழங்குவதில்லை. அரசு துறைகளில் பணியின் போது இறந்த ஊழியர்களின் குடும்பத்தினர் பலர், கருணை பணி நியமனத்திற்காக காத்திருக்கின்றனர்.

ஏற்புடையதல்ல




படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பை எதிர்நோக்கியுள்ளனர். அனைவரையும் அரசு சமமாக கருத வேண்டும். இவ்விவகாரத்தில் பணி நியமனம் வழங்கியது விதிகளுக்கு முரணானது.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு திறன் வளர்ப்பு பயிற்சியை வழங்கி அரசு உதவியிருக்கலாம். அது பணி வழங்குவதை விட பயனுள்ளதாக இருக்கும். அவர்களை சுயதொழில் முனைவோராக ஏன் மாற்றக்கூடாது?

சாதாரண பணி வழங்கியதாக அரசு தரப்பு கூறுவது ஏற்புடையதல்ல. எந்த பணியும் சாதாரண பணி அல்ல. அது ஒருவரின் குடும்பத்திற்கு உதவும் பணியே. ராணுவ வீரர்கள் பணியின் போது இறந்தால், அவர்களின் வாரிசுக்கு கருணை பணி வழங்குவதாக அரசு தரப்பு கூறுவது ஒப்பீட்டளவில் ஏற்புடையதல்ல.

கருணை பணி நியமனத்திற்கு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த வழிகாட்டுதல்களை தமிழக அரசு மீறி உள்ளது. இதை அனுமதித்தால் ஒரு தவறான முன்னுதாரணமாக அமைந்து விடும். கரூர் சம்பவத்திற்கு கருணை பணி நியமனத்திற்கான அரசாணை ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement