கருங்கடல் தாக்குதலில் இந்திய மாலுமி உயிரிழப்பு; உக்ரைன் தூதரை நேரில் அழைத்து இந்தியா கடும் கண்டனம்

நமது நிருபர்

கருங்கடலில் சென்ற வணிக கப்பல் மீது உக்ரைன் ட்ரோன்கள் நடத்திய தாக்குதலில் இந்திய மாலுமி கொல்லப்பட்டார். இது தொடர்பாக உக்ரைன் தூதரிடம் மத்திய வெளியுறவு அமைச்சகம் தன் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் - ரஷ்யா இடையே நான்கு ஆண்டுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இந்நிலையில் கருங்கடல் பகுதியில் கடந்த 18ம் தேதி சென்ற எம்.வி.ஓமோர்பி என்ற வணிக கப்பல் மீது உக்ரைன் ட்ரோன்கள் எனப்படும் ஆளில்லா சிறிய ரக விமானங்கள் நடத்திய தாக்குதலில் அந்த கப்பலில் சென்ற இந்திய மாலுமி கொல்லப்பட்டார்.

இது தொடர்பாக உக்ரைன் நாட்டுக்கான இந்திய துாதர் ஒலெக்சாண்டர் பொலிசுக்கு சம்மன் அனுப்பிய மத்திய வெளியுறவு அமைச்சகம், இந்திய மாலுமி கொல்லப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தது.

வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், 'வணிகக் கப்பல் போக்குவரத்து மீதான இத்தகைய தாக்குதல்கள் கடும் கண்டனத்துக்குரியது. அப்பாவி மாலுமிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் இத்தகைய நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. இது தவிர்க்கப்பட வேண்டும்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement