சென்னை சென்ட்ரல் அருகே ‘போதை’ மாணவர்கள் வெறியாட்டம் இருவருக்கு வெட்டு; மக்கள் அலறியடித்து ஓட்டம்

சென்னை: சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் – பூங்கா ரயில் நிலையம் இடையிலான சுரங்கப்பாதையில் நேற்று காலை, பச்சையப்பன் கல்லுாரி மாணவர்கள் இருவரை, அதே கல்லுாரியைச் சேர்ந்த, 15 மாணவர்கள் கொண்ட கும்பல், பட்டாக் கத்தியால் சரமாரியாக வெட்டியது. பட்டப்பகலில் நடத்தப்பட்ட இந்த கொலை வெறியாட்டத்தை கண்டு, பொதுமக்கள், வியாபாரிகள் அலறியடித்து ஓடினர்.

சென்னையில் கல்லுாரி மாணவர்களுக்குள், ‘யார் ரூட் தல’ என்று கெத்து காட்டுவதில் மோதல் ஏற்பட்டு வருகிறது. இது, கொலை நடக்கும் அளவுக்கு விபரீதமாகிவிட்டது. கடந்த 2024 அக்டோபரில், சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே, பச்சையப்பன் கல்லுாரி, மாநில கல்லுாரி மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், மாநில கல்லுாரி மாணவர் சுந்தர், 19, என்பவர் கொல்லப்பட்டார்.

இதைத் தொடர்ந்து போலீசார் தடுப்பு நடவடிக்கைகள் எடுத்தாலும், மோதல்கள் தொடர்கின்றன.

சென்னை, அவடியை அடுத்த திருமுல்லைவாயலை சேர்ந்தவர் நிதிஷ்குமார், 18. கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லுாரியில் பி.எஸ்சி., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அதே கல்லுாரியில் திருவள்ளூரைச் சேர்ந்த 17 வயது மாணவர் பி.காம்., முதலாம் ஆண்டு படிக்கிறார்.

நேற்று காலை 10:00 மணியளவில் இருவரும், கல்லுாரிக்கு செல்வதற்காக சென்ட்ரல் மெட்ரோ -– பூங்கா ரயில் நிலையங்களை இணைக்கும் சுரங்கப்பாதையில் நடந்து சென்றனர். அப்போது, அங்கு முன்கூட்டியே கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்திவிட்டு, கையில் பட்டாக்கத்தியுடன் காத்திருந்த அதே கல்லுாரியைச் சேர்ந்த 15 மாணவர்கள், இருவரையும் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். இதை கண்ட பயணியர் அலறியடித்து ஓடினர்.

காயமடைந்த மாணவர்கள் இருவரையும், அங்கிருந்த வர்கள் மீட்டு, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

தகவலறிந்து வந்த பெரியமேடு போலீசார் விசாரித்த னர். தாக்குதலில் ஈடுபட்ட 15 மாணவர்களை தேடி வருகின்றனர்.

Advertisement