சொல்கிறார்கள் –––––––––––––––– ‘பொருளை தரமாக கொடுப்பதே பெரிய விளம்பரம் தான்!’ ––––––––––––––––



கடந்த, 40 ஆண்டுகளாக அப்பளம் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள, திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த, 64 வயதாகும் பொன்னுலட்சுமி:

எங்கள் ஊரின் பெயரை சொன்னாலே, அப்பளம் தான் ஞாபகம் வரும். அந்த அளவுக்கு எங்கள் ஊருக்கும், அப்பளத்திற்கும் ஒரு தனி பந்தம் உள்ளது. எங்கள் ஊரில் ஆண்டு முழுதும் ஓடும் தாமிரபரணி ஆறும், வஞ்சகமில்லாமல் அடிக்கும் வெயிலும் தான், இதற்கு முக்கிய காரணம்.

இங்கு, பல குடும்பங்களில் தலைமுறை தலைமுறையாக அப்பளம் தயாரித்து, விற்பனை செய்து வருகின்றனர். வீட்டையே தொழிற்சாலை மாதிரி மாற்றி, பலரும் தொழில் நடத்துகின்றனர்.

நான், 22 வயதில் அப்பளம் தயாரித்து, விற்பனை செய்ய ஆரம்பித்தேன். இப்போது, 64 வயதாகிறது. இன்னும் அதே வேகத்தில் தான் வேலை பார்க்கிறேன். இந்த வேலையை விட முடியவில்லை. என் வாழ்க்கையுடன் இந்த அப்பளமும் கலந்து விட்டது.

உளுந்து, மரவள்ளிக்கிழங்கு, அரிசி மாவில் அப்பளம் தயாரிக்கிறேன். ஒரு நாளைக்கு, 600 அப்பளங்கள் தயாரிக்க முடியும். எங்களது இளமை காலத்தில் ஒரு நாளைக்கு, 2,000 அப்பளங்கள் தயாரித்தோம். இப்போது, 600 அப்பளங்கள் வரை தயாரிக்கிறேன். இந்த அளவுக்கு ஒருவர் வேலை பார்த்தால், ஒரு நாளைக்கு 300 ரூபாய் சம்பாதிக்க முடியும்.

அப்பளம் தயாரிப்பது மட்டுமல்ல; அதை சரியான நேரத்தில் காய வைக்க வேண்டும். மழைக்காலம் வந்தால் சிறிது சிரமம் தான். ஆனால், மழைக்காலத்தில், 20 நாட்களாவது வேலை நடக்கும்.

‘காஸ் சிலிண்டர்’ கிடைக்கவில்லை எனில், பழைய விறகடுப்பும், வெண்கல சட்டியும் இருக்கிறது. அதற்காக, வேலையை நிறுத்திவிட மாட்டேன். உதவிக்கு இருவர் இருந்தாலும், பெரும்பாலான வேலைகளை நானே செய்து விடுவேன்.

நல்ல பொருளை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்பது தான் என் ஆசை. அதற்காக, எப்படியெல்லாம் நன்றாக செய்ய முடியும் என்று யோசித்து, ஒவ்வொன்றும் செய்கிறேன். அப்படித்தான் பிரண்டைச்சாறு கலந்து அப்பள மாவு பிசைய ஆரம்பித்தேன். அப்படி செய்தால், அப்பளம் மிகவும் ருசியாக இருக்கும்.

அப்பளங்கள் தரமாக இருப்பதால், எங்களை தேடி வந்து வாங்குகின்றனர்; தரமாக கொடுப்பதே பெரிய விளம்பரம் தான். என் கடைசி காலம் வரை, மக்களுக்கு சுவையான அப்பளங்களை கொடுத்தபடி இருப்பேன்.

***

* தொலைபேசி எண் கிடைக்காததால் சேர்க்க முடியவில்லை பாஸ்!

***

Advertisement