திமுக ஆட்சியில் தயாரித்த மெட்ரோ திட்ட அறிக்கை; தமிழக அரசு மறு ஆய்வு செய்து சமர்ப்பிக்க எதிர்பார்ப்பு

கோவை: தி.மு.க., ஆட்சியில் தயாரிக்கப்பட்ட மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையில் என்னென்ன தவறுகள் இருக்கின்றன என்பதை தற்போதைய அரசு ஆய்வு செய்து திருத்திய திட்ட அறிக்கையை மத்திய அரசுக்கு சமர்ப்பித்து ஒப்புதல் பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கோவையில் மெட்ரோ ரயில் செயல்படுத்தலாம் என, 2011ல் மத்திய அரசு அறிவித்தது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அதற்கான சாத்தியக்கூறு ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தது. ஒரு முறை போதிய ஆவணங்கள் இணைக்காததால் அறிக்கை திரும்பி வந்தது; 2 முறை நிராகரித்திருக்கிறது.

டில்லியில் இருக்கும் அதிகாரிகளுக்கு கோவையின் கள நிலவரம் தெளிவாக புரியும் வகையில் அறிக்கை வாயிலாக தெளிவுபடுத்த வேண்டியது மாநில அரசு அதிகாரிகளின் கடமை. எனவே, துறை ரீதியாக மறுஆய்வு செய்ய வேண்டியது அவசியம்.

அரசியல் அவசியமில்லை




இத்திட்டத்துக்கான விரிவான அறிக்கை தி.மு.க., ஆட்சியில் தயாரிக்கப்பட்டது. கடந்த காலங்களில் மத்திய அரசுடன் தி.மு.க., மோதல் போக்கை கையாண்டது. இத்திட்டத்தை இனியும் அரசியலாக்காமல், கோவையில் கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தோடு தற்போதைய த.வெ.க., அரசு அணுக வேண்டும்.

திட்ட அறிக்கையில் உள்ள பிழைகளை கண்டறிய வேண்டும் அல்லது மற்ற மாநிலங்களில் எவ்வாறு அனுமதி பெறப்பட்டது; அந்த அறிக்கையில் சொல்லப்பட்ட விஷயங்களில் நாம் தவற விட்டது என்ன; மெட்ரோ ரயில் கொள்கையில் சொல்லப்பட்டிருப்பது என்ன என்பதை அறிந்து, அதற்கேற்ப திட்ட அறிக்கை தயாரிக்க வேண்டும்.

கோவையில் சாலை அகலம் போதிய அளவு இல்லை. திட்ட அறிக்கையில், 22 மீட்டர் அகல சாலையுடன் மெட்ரோ முன்மொழியப்பட்டது. அவிநாசி ரோட்டில் அண்ணாதுரை சிலை சந்திப்பில் இருந்து நீலாம்பூர் வரை, 20.4 கி.மீ.,க்கு மெட்ரோ பாதை ஆய்வு செய்யப்பட்டது. நீலாம்பூரில் 'மெட்ரோ டெப்போ' அமைக்க, 16 ஹெக்டேர், இரு வழித்தடங்களிலும் மெட்ரோ பாதை அமைக்க, 10 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த வேண்டும்.

தமிழக அரசு ஏற்கணும்




விமான நிலைய விரிவாக்கத்துக்கு தேவையான நிலத்துக்கு, தமிழக அரசே ரூ.2,300 கோடி வரை இழப்பீடு கொடுத்து, கையகப்படுத்தி, ஆணையத்திடம் ஒப்படைத்தது. திருச்சி ரோட்டில் சிங்காநல்லுார் சந்திப்பில் மேம்பாலம் கட்டுவதற்கு நிலம் கையகப்படுத்தும் பொறுப்பை தமிழக அரசு ஏற்றுக் கொள்ள வேண்டுமென்கிற நிபந்தனையுடன் அனுமதி தந்தது. அதேபோல், மெட்ரோ திட்டத்திலும் தேவையான நிலத்தை கையகப்படுத்தும் செலவை தமிழக அரசே ஏற்றுக் கொள்வதாக உறுதியளிக்கும் பட்சத்தில் ஒப்புதல் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

மேலும், கோவை, மதுரை என இரு நகரங்களுக்கான திட்ட அறிக்கைகளை ஒன்றாக சேர்ப்பதே தவறு. கோவையில் உயர்மட்டத்தில் செல்லும் மெட்ரோ, மதுரையில் நிலத்தடியில் செல்லும் மெட்ரோ. இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. இரண்டு அறிக்கையையும் தனித்தனியாக பிரித்தெடுத்து அனுமதி பெற வேண்டும்.

எனவே, திட்ட அறிக்கையை மறுஆய்வு செய்து தவறுகளை திருத்துவதோடு, கோவைக்கு மெட்ரோ ஏன் அவசியம் என்பதை விளக்க வேண்டும். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தினர் மட்டுமின்றி தமிழக அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் டில்லி சென்று மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சக அதிகாரிகளுடன் கலந்து பேசி, தீர்வு காண வேண்டும்.

@block_B@

'போக்குவரத்து கொள்கை வகுக்கணும்'



மெட்ரோ இயக்க திட்டமிட்டுள்ள வழித்தடங்களில் சாலை வழியாக பைக், கார் உள்ளிட்ட இதர போக்குவரத்து வாகனங்களில் செல்வதற்கும், மெட்ரோவில் செல்வதற்கும் 3 - 4 நிமிடங்கள் மட்டுமே வித்தியாசம் வரும். எனவே, பெரும்பாலான வாகன ஓட்டிகள் மெட்ரோவுக்கு மாறுவது சாத்தியமில்லை என்பதோடு, தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமற்றது என்கிற குறிப்புடன், திட்ட அறிக்கையை திருப்பி அனுப்பியது. அதிகமான பயணிகளை மெட்ரோவுக்கு மாற்ற வேண்டுமெனில், போக்குவரத்து கொள்கையை மாநில அரசு வகுக்க வேண்டியது கட்டாயம்.block_B

@block_y@

'நகரம் விரிவடையும்'



கோவை எம்.பி., ராஜ்குமாரிடம் பேசியபோது, ''கோவை போன்ற விரைவாக வளர்ந்து வரும் நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டம் மிக அவசியம்; பாகுபாடு பார்க்காமல் அனுமதி தர வேண்டும். மெட்ரோ செயல்படுத்தினால், திட்டமிட்ட சீரான வளர்ச்சி இருக்கும். நிறைய ஐ.டி., பார்க்குகள் வர ஆரம்பித்து விட்டன. நகர விரிவாக்கம் ஏற்படும்,'' என்றார்.block_Y

Advertisement