தேர்ச்சியை விட விண்ணப்பம் அதிகம் : நீட் தகுதி மதிப்பெண் குறையும்?

சென்னை: தமிழகத்தில் தேர்ச்சி பெற்றவர்களை விட, விண்ணப்பம் அதிகரித்துள்ள நிலையில், 'நீட்' தகுதி மதிப்பெண் குறைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழகத்தில், அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள, 13,999 எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பிற்கான மாணவர் சேர்க்கையை, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனரகத்தின் மருத்துவ மாணவர் சேர்க்கை குழு நடத்துகிறது.

'நீட்' தேர்வு எழுதிய மாணவர்கள் விண்ணப்பிக்கும் வகையில், தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கு முன்பே, விண்ணப்பிக்க வாய்ப்பு தரப்பட்டது. இதில், விண்ணப்பிக்கும் நடைமுறை, 23ம் தேதியுடன் முடிந்தது. அப்போது, 70,488 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

இதற்கிடையே, மாணவர்கள் கோரிக்கையை ஏற்று, விண்ணப்பிக்க கூடுதலாக இரண்டு நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது. அதற்கான அவகாசம் நேற்று முடிந்த நிலையில், 2,100 பேர் வரை விண்ணப்பித்துள்ளனர். இதற்கிடையே, தேர்ச்சி பெற்றவர்கள் எண்ணிக்கை, 61,306 ஆக இருக்கும் நிலையில், விண்ணப்பம் அதிகமாக இருப்பதால், 'நீட்' தகுதி மதிப்பெண் குறைக்கப்பட வாய்ப்புள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து, மருத்துவ கல்வி இயக்க அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் 'நீட்' தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களை விட, விண்ணப்பங்கள் அதிகமாக வந்துள்ளன. குறிப்பாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்கள், மற்ற மாநிலங்களில் பணி நிமித்தமாக இருக்கும்போது, அவர்கள் அம்மாநிலங்களில் தேர்வு எழுதி இருக்கலாம். அவர்கள் தமிழக மாணவர் சேர்க்கையில் சேர, தகுதி உடையவர்கள். கவுன்சிலிங்கின்போது, இருப்பிட சான்று உறுதி செய்யப்பட்டு சேர்க்கை வழங்கப்படும்.

இதில், தகுதி மதிப்பெண் பெறாத மாணவர்கள் கூட விண்ணப்பித்து இருக்க வாய்ப்பு உள்ளது. தரவரிசை பட்டியலில், அவர்களது பெயர் இடம் பெறாது. அதேநேரம், சுயநிதி கல்லுாரிகளில், மருத்துவ படிப்பு நிரம்பாத பட்சத்தில், 'நீட்' தகுதி மதிப்பெண்ணை குறைத்து, மாணவர் சேர்க்கை நடத்தவும் வாய்ப்புள்ளது. கடந்த காலங்களில் இம்முறை கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement