அரசு வருவாயை அதிகரிக்க ஆலோசனை குழு: தமிழக அரசு நியமனம்

16

சென்னை: தமிழக அரசின் வருவாயை அதிகரிக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை வழங்க, பொருளாதார நிபுணர் மான்டேக் சிங் அலுவாலியா தலைமையில், ஆறு பேர் அடங்கிய குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது.

தமிழக அரசு, 10 லட்சம் கோடி ரூபாய் கடனில் உள்ளது. அரசின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில், சொந்த வரி வருவாய், சுரங்கங்கள் மற்றும் கனிமங்களில் இருந்து கிடைக்கும் வருவாய் உள்ளிட்ட, முக்கிய வரி வருவாய்களில் ஏற்பட்ட சரிவு தொடர்பாக தெரிவிக்கப்பட்டது.

இந்த வருவாய் பற்றாக்குறையை சரி செய்து, மாநிலத்தின் வருவாயை அதிகரிக்க, ஆலோசனை வழங்குவதற்காக, பொருளாதார நிபுணரும், முன்னாள் திட்டக்குழு துணை தலைவரும், பிரதமரின் முன்னாள் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினருமான மான்டெக் சிங் அலுவாலியா தலைமையில், வருவாய் அதிகரிப்பு குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது.

டில்லி தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி மன்ற பொருளாதார துறைத் தலைவர் கிருஷ்ணன், சர்வதேச நிதியத்தின் நிதி விவகாரத் துறை பொருளாதார நிபுணர் அரவிந்த் மோடி, மத்திய கலால் மற்றும் சுங்க வாரிய முன்னாள் தலைவர் நஜிப் ஷா, தமிழக அரசின் நிதித்துறை செயலர் சித்திக், சென்னை வளர்ச்சி ஆய்வு நிறுவன உறுப்பினர் சுரேஷ் பாபு ஆகியோர், குழுவின் உறுப்பினர்களாக உள்ளனர்.

இக்குழு, மாநிலத்தின் சொந்த வரி வருவாய், வரியில்லாத வருவாயை அதிகரிக்க, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, அரசுக்கு ஆலோசனை வழங்கும்.

வருவாய் வசூல் செய்யும் துறைகளில் முறைகேடு, வரி ஏய்ப்பு, நிர்வாக குறைபாடு ஆகியவற்றை தடுப்பதற்கும், வருவாய் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும், தேவையான நடவடிக்கைகளை பரிந்துரை செய்யும். இக்குழு மூன்று மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement