எங்கள் வலியெல்லாம் இனி மற்றவர்களுக்கு மருந்தாகும்; 'நீட்' தேர்வில் சாதித்த அரசுப்பள்ளி மாணவர்கள் நெகிழ்ச்சி

13


- நமது நிருபர் -


எளிய குடும்ப பின்னணி, வறுமை, உடல்நலக் குறைவு, சமூகத்தின் எதிர்மறை பேச்சுக்கள் என அனைத்து வலிகளையம், தடைகளையும் தகர்த்தெறிந்து மருத்துவக் கல்லுாரி கனவை நனவாக்கியுள்ளனர் திருப்பூர் இடுவம்பாளையம் அரசுப் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர். அவர்களின் வெற்றிப் பயணமும், அனுபவ பகிர்வும்...

பெற்றோரின் தியாகமே என் வெற்றி

ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே எனக்கு மருத்துவராக வேண்டும் என்ற லட்சியம் இருந்தது. அதற்குத் தேவையான சரியான வழிகாட்டுதலை என் பள்ளி ஆசிரியர்களே எனக்குக் கொடுத்தார்கள்.

மூன்று பெண் குழந்தைகள் உள்ள எங்கள் குடும்பத்தில், 'எதற்கு இவ்வளவு படிப்பு, படிப்பை நிறுத்து' என பலர் மனம் தளர வைத்தாலும், என் பெற்றோர் அதைப் பொருட்படுத்தவில்லை.

என் கனவுக்காக தங்களது உழைப்பு, துாக்கத்தை அர்ப்பணித்தார்கள். ஆசிரியர்களின் சரியான வழிகாட்டுதலும், விடாமுயற்சியும் இருந்தால் அரசுப் பள்ளி மாணவர்களால் நிச்சயம் சாதிக்க முடியும்; அதற்கு நான் ஒரு உதாரணம்.

- மாணவி ஜோஷிகா

பாடப்புத்தகங்களை படித்தாலே போதும்

உயிர்காக்கும் உன்னத தொழில்; கடவுளின் மறுரூபமாக டாக்டரை தான் சொல்றோம். அதனால, டாக்டராகணும்ன்னு ஆசைப்பட்டேன். வாரத்தின் முதல் ஐந்து நாட்கள் பள்ளி பாடத்தையும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 'நீட்' தேர்வுக்கான சிறப்புப் பயிற்சியிலும் கவனம் செலுத்தினேன்.

'நீட்' தேர்வு என்பது நாம் பயப்படும் அளவுக்குக் கடினமானது அல்ல. நமது பள்ளிப்பாடப் புத்தகங்களை முழுமையாகவும் தெளிவாகவும் படித்தாலே எளிதில் வெற்றி பெற முடியும். சந்தேகங்கள் எழும்போதெல்லாம் அதை உடனுக்குடன் ஆசிரியர்களிடம் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்வது மிக அவசியம்.

- மாணவர் சுசிதரன்

'சோஷியல் மீடியா'வை தவித்தேன்

பத்தாம் வகுப்பு வரை படிப்பில் பெரிய ஈடுபாடு இல்லாததால் குறைந்த மதிப்பெண்களே எடுத்தேன். ஆனால் 11, 12-ஆம் வகுப்புகளில் தீவிரமாக படிக்க தொடங்கினேன். ஆரம்பத்தில் பிசியோதெரபி அல்லது சித்த மருத்துவம் படிப்பதே என் இலக்காக இருந்தது.

என் ஆசிரியரின் ஊக்கத்தாலும், 'நீட்'டில் தேர்ச்சி பெற்ற நமது பள்ளி மூத்த மாணவருடன் பேசியதாலும் ஆர்வம் ஏற்பட்டு, 'நீட்' தேர்வுக்குத் தயாராக முடிவெடுத்தேன்.

அதிகாலை துவங்கி, நள்ளிரவு வரை படித்துக் கொண்டே இருந்தேன். சமூக வலைதளங்களில் இருந்து முற்றிலுமாக விலகியிருந்தேன்; என் உழைப்புக்கேற்ற பலன் கிடைத்துள்ளது.

- மாணவர் மவுனீஷ்

தனி மரம் தோப்பானது

சிறுவயதிலிருந்தே மருத்துவராக வேண்டும் என்பது என் கனவு. தமிழ் வழியில் படித்ததால், 'கோச்சிங் சென்டர்'களில் அதிக பணம் கொடுத்துப் படிக்க முடியாதோ என்ற பயம் இருந்தது. எனக்கு தந்தை இல்லாத சூழலில், ஒற்றைப் பெற்றோராய் என் தாய் என்னை வளர்த்தார்.

'தனியாக இருந்து ஏன் மகளை இவ்வளவு துாரம் படிக்க வைக்கிறாய்?' என சுற்றியிருந்தவர்களும், உறவினர்களும் மனச்சோர்வு அடையும்படி பேசினர். என் அம்மா அதை உதாசீனப்படுத்தி, எனக்காக தியாகம் செய்தார்.

'நீட்' பயிற்சி நேரத்தில் கடுமையான ஆஸ்துமா பிரச்னையால் அடிக்கடி மருத்துவமனை செல்ல வேண்டியிருந்தது. இருப்பினும், ஆசிரியர்கள், நண்பர்களின் ஆதரவு, என் தாயின் உழைப்பால் என் மருத்துவக் கல்லுாரி கனவு நனவானது.

- மாணவி பவித்ரா

மொழி ஒரு தடையல்ல...

நான் தமிழ் வழியில் படித்துதான் இந்த நிலையை அடைந்துள்ளேன். முதல் முறையில் 'நீட்' எழுதி, கலந்தாய்வு வரை சென்றும், 10 முதல் 20 மதிப்பெண் குறைவாக இருந்ததால் எம்.பி.பி.எஸ்., 'சீட்' கிடைக்கவில்லை. பல் மருத்துவப் படிப்பு கிடைத்தும், விருப்பம் இல்லாததால் அதைத் தவிர்த்துவிட்டு, இரண்டாம் ஆண்டாக மீண்டும் முயன்றேன்.

மொழி, தடையே கிடையாது. ஒரு மாதம் கடினமாக உழைத்தால் ஆங்கிலம் கற்றுக் கொள்ள முடியும். வாழ்க்கை மற்றும் படிப்பில் சிரமங்கள் இருப்பது இயல்புதான். அதை ஒரு போராட்டமாக எதிர்கொண்டால் மட்டுமே ஜெயிக்க முடியும். பெற்றோர் நமக்காகப் படும் கஷ்டங்களை விட நாம் படும் சிரமங்கள் பெரிதல்ல.

- மாணவி மகாலட்சுமி

வேலைக்கு சென்றபடியே சாதித்தேன்

மூன்றாண்டு தொடர் முயற்சிக்குப் பின் இன்று மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்துள்ளேன். 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் தான் படித்தேன். என் தந்தை, இறந்துவிட்டார். பனியன் நிறுவனத்தில் வேலை செய்து தான் அம்மா என்னை வளர்த்தார்.

என்னை ஒரு மருத்துவராக பார்க்க வேண்டும் என்பது என் பெற்றோரின் நீண்ட நாள் ஆசை. 3 ஆண்டுகளாக 'நீட்' தேர்வுக்காக கடுமையாகப் போராடினேன். ஒவ்வொரு முறை தகுதி பெற்ற போதும், 10 மதிப்பெண் வித்தியாசத்தில் வாய்ப்பு நழுவியது.

முதல் முறை மட்டுமே 'கோச்சிங் சென்டர்' சென்று படித்தேன். குடும்ப சூழல் காரணமாக அம்மாவுக்கு துணையாக நானும் வேலைக்கு சென்று கொண்டே படித்தேன். இன்று, என் பெற்றோரின் கனவை நனவாக்கிவிட்டது.

- மாணவி சக்தி சபரீஸ்வரி

வீடியோ பார்க்க…

நீட் தேர்வில் சாதித்த அரசு பள்ளி மாணவ, மாணவிகள் நெகிழ்ச்சி பேட்டி

தினமலர் வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement