முதல்வருடன் பா.ஜ., மாநில தலைவர் திடீர் சந்திப்பு புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு தொடர்பாக பா.ஜ., என்.ஆர்.காங்., இடையே இழுபறி நீடித்து வரும் நிலையில், நேற்று இரவு முதல்வர் ரங்கசாமியை பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று, என்.ஆர்.காங்., தலைவர் ரங்கசாமி முதல்வராக பதவியேற்றார். அவரை தொடர்ந்து பா.ஜ.,வில் 2 பேரும், என்.ஆர்.காங்., 3 பேரும் அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர்.

அமைச்சர்களுக்கு இலாகா பிரித்து கொடுக்காததால் முதல்வர் நிகழ்ச்சியினை பா.ஜ., அமைச்சர்கள், எம்.எல். ஏ.க்கள்., புறக்கணித்து வந்தனர்.

நீண்ட இழுபறிக்கு பின், கடந்த 20ம் தேதி அமைச்சர்களின் இலாகாக்கள் பட்டியலை கவர்னரிடம் முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.

முதல்வர் இலாகா பட்டியல் கொடுத்தால் சில மணி நேரங்களில் ஒப்புதல் கிடைத்து விடும். ஆனால் ஒரு வாரமாகியும் இதுவரை ஒப்புதல் வழங்கப்படாமல் உள்ளது.

இதற்கு பா.ஜ., அமைச்சர்களுக்கு முக்கிய இலாகா கொடுக்காததே காரணம் என கூறப்படுகிறது. நேற்று முன்தினம் முதல்வரிடம் அமைச்சர்களின் இலாகா குறித்து நிருபர்கள் கேட்டபோது கணக்கு தீர்க்கப்படும் நேரத்தில் தீர்க்கப்படும் என, கூறினார்.

முதல்வரின் இந்த கருத்து கூட்டணியில் விரிசல் வெட்ட வெளிச்சமாகியது. இந்நிலையில் நேற்று சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தி.மு.க., வைச் சேர்ந்த நாஜீம் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பேசினார். அப்போது அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என, அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், நேற்று இரவு 9:30 மணியளவில், பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் கோரிமேடு டென்னிஸ் கோர்ட்டில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின் போது கூட்டணியில் தற்போது நிலவி வரும் பிரச்னை குறித்து பேசியதாக தெரிகிறது.

இதனால் அமைச்சர்களின் இலாகா ஒதுக்கீடு விரைவில் வெளியாகும் என, தெரிகிறது.

Advertisement