இணையவழி மோசடி புகார்களில் காப்பாற்றப்பட்டது ரூ.11,158 கோடி


சென்னை: 'நாடு முழுதும் கடந்த ஐந்தாண்டுகளில் நடந்த, 32.80 லட்சம் இணையவழி மோசடி புகாரில், 11,158 கோடி ரூபாய் காப்பாற்றப்பட்டுள்ளது' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

லோக்சபாவில் மத்திய உள்துறை இணை அமைச்சர் பண்டி சஞ்சய் குமார் அளித்த பதில்: நிதி மோசடிகள் குறித்து, உடனடியாக புகார் அளிக்கவும், மோசடிக்காரர்களால் பணம் எடுக்கப்படுவதை தடுக்கவும், குடிமக்கள் நிதி சார் இணைய மோசடி புகார் மற்றும் மேலாண்மை அமைப்பு, 2021ல் தொடங்கப்பட்டது. அப்போதிருந்து இந்தாண்டு ஜூன் 30ம் தேதி வரை, 32.80 லட்சத்துக்கும் அதிகமான புகார்களில், 11,158 கோடி ரூபாய் காப்பாற்றப்பட்டு உள்ளது.

அதேபோல், தேசிய குற்ற ஆவண காப்பகம் மற்றும், குடிமக்கள் நிதிசார் இணைய மோசடி புகார் மேலாண்மை அமைப்பு தரவுகளின்படி, 2023 முதல் 2025ம் ஆண்டு வரை, 50.11 லட்சம் புகார்கள் பதிவாகி உள்ளன. இவற்றின் அடிப்படையில், சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக, 7,788 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளது. மேலும், 132 கோடி ரூபாய் திரும்ப பெறப்பட்டு உள்ளது.

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் இணைந்து, இணைய குற்றவாளிகள் அடையாள விபரங்கள் அடிப்படையில், 'சந்தேகத்திற்குரியோர் பதிவேடு', 2024ல் தொடங்கப்பட்டது. அதில், வங்கிகளிடம் இருந்து பெறப்பட்ட தரவுகளின்படி, 32.08 லட்சம் போலி வங்கி கணக்குகள், அடையாளம் காணப்பட்டன. அத்துடன், 25,698 கோடி ரூபாய் மதிப்பிலான பரிவர்த்தனைகள் தடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement