சமரச தீர்வு மையத்தில் தமிழக நிதி அமைச்சர் ஆஜர்!

2

சென்னை: சொத்து பிரச்னையில், வீடு புகுந்து, சொந்த அண்ணன், அண்ணியை தாக்கி, மிரட்டல் விடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமரச தீர்வு மையத்தில், நேற்று ஆஜரானார்.

தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன், அவரது தந்தை நெஸ்தோர் ஆகியோர், சொத்து தகராறில், 2022ம் ஆண்டு ஆக., 8ம் தேதி புதுச்சேரி, எழில் நகரில் வசித்து வரும், மரிய வில்சனின் அண்ணன் மரிய குலோத், அண்ணி ஆகியோரின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று, ஆபாசமாக திட்டி, கட்டையால் தாக்கி, மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக, மரிய குலோத் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்தனர். புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில், வழக்கு விசாரணையில் உள்ளது.

இந்த வழக்கில், குற்றப்பத்திரிகை நகலைப் பெற, நேரில் ஆஜராக உத்தரவிட்ட போதும், மரிய வில்சன் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்து வந்தார். இதையடுத்து, கட்டாயம் ஆஜராக வேண்டும் என, மரிய வில்சனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில், மரிய வில்சன் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், குடும்ப பிரச்னையாக இருப்பதால், மரிய வில்சன், அவரது தந்தை மற்றும் அண்ணண் உள்ளிட்டோர், உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமரச தீர்வு மையத்தில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, சமரச தீர்வு மையத்தில், அமைச்சர் மரிய வில்சன் உள்ளிட்டோர், மூன்றாவது முறையாக நேற்று ஆஜராகினர். ஒரு மணி நேரம் நடந்த சமரச பேச்சில், இரு தரப்பு இடையே தீர்வு எட்டப்படாததால், ஆக., 12ம் தேதி அமைச்சர், அவரது சகோதரர் ஆகியோர், மீண்டும் நேரில் ஆஜராக, சமரச தீர்வு மையம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement