24 மணிநேரம் 24 நிமிடங்கள் பறந்த ஏர்பஸ் விமானம்; வானில் அதிக நேரம் பறந்து சாதனை

மெல்போர்ன்: உலகின் நீண்ட தூர விமான சேவை வழங்கும் முயற்சியாக, தொடர்ந்து 24 மணிநேரம் 24 நிமிடங்கள் ஏர்பஸ் விமானத்தை பறக்க விட்டு ஆஸ்திரேலியாவின் குவாண்டஸ் நிறுவனம் சாதனை படைத்துள்ளது.

பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வணீக ரீதியிலான இந்த ஏர்பஸ் ஏ350 ரக விமானம், கடந்த ஜூலை 27ம் தேதி மாலை 5.27 மணிக்கு மெல்போர்னில் இருந்து புறப்பட்டு, மறுநாள் (ஜூலை 28) மாலை பிரான்சின் டுலூஸ் நகருக்கு சென்றடைந்தது. மெல்போர்னில் இருந்து புறப்பட்டு, பசிபிக் பெருங்கடல், அமெரிக்கா, கனடா மற்றும் அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து 23,075 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்தது. சுமார் 24 மணிநேரம் 24 நிமிடங்கள் தொடர்ந்து வானில் பறந்துள்ளது. இதன்மூலம், அதிக தூரம் வானத்தில் பறந்து சாதனை படைத்துள்ளது.

2005ம் ஆண்டு ஹாங்காங் - லண்டன் சோதனைப் பயணத்தின் போது, போயிங் 777-200எல்ஆர் விமானம் படைத்த 22 மணி நேரம் 42 நிமிடங்கள் என்ற முந்தைய சாதனையை இது முறியடித்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கடற்கரையிலிருந்து லண்டன் மற்றும் நியூயார்க் நகரங்களுக்கு 2027ம் ஆண்டு முதல் நீண்ட விமான சேவையைத் தொடங்குவதை நோக்கமாகக் கொண்ட குவாண்டஸ் நிறுவனத்தின் 'புராஜெக்ட் சன்ரைஸ்' திட்டத்திற்கு இச்சாதனைப் பயணம் ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

இது ஏர்பஸ் ஏ350-1000 யுஎல்ஆர் (Ultra Long Range) என்ற பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த விமானத்தில், தொலைதூர பயணங்களை சாத்தியப்படுத்தும் விதமாக, கூடுதலாக 20,000 லிட்டர் எரிபொருள் டேங்க் பொருத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement