கருவேல்குரிச்சியில் மீன்பிடித் திருவிழா

திருப்புத்துார்:திருக்கோஷ்டியூர் அருகே கருவேல்குரிச்சி கண்மாயில் நடந்த மீன்பிடித் திருவிழாவில் குறைந்த அளவிலே மீன்கள் சிக்கின.

திருப்புத்துார் பகுதி கண்மாய்களில் கோடை துவங்கியவுடன் குறைந்த அளவிலான நீர் உள்ள கண்மாய்களை பராமரிக்க வசதியாக அழிக்கத் துவங்குவர். கண்மாயில் உள்ள மீன்களை பிடித்துக் கொள்ள நாள் குறிக்கப்பட்டு மக்களுக்கு அறிவிக்கப்படும். அது போல நேற்று கருவேல்குரிச்சி கண்மாயில் மீன்பிடித் திருவிழா நடந்தது. அதில் திருப்புத்துார், திருக்கோஷ்டியூர், கருங்குளம், பட்டமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த கிராமத்தினர் மீன் பிடித்தனர்.

ஊத்தா, கொசுவலை, மீன் பிடி வலை, அரி கூடை , கச்சா உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்கள் மூலம் பலரும் ஆர்வத்துடன் மீன்களைப் பிடித்தனர். கட்லா, ஜிலேபி, குரவை, விரா உள்ளிட்ட நாட்டு வகை மீன்கள் கிடைத்தன. இருப்பினும் பலருக்கும் எதிர்பார்த்த அளவு மீன்கள் கிடைக்கவில்லை.

Advertisement