லிப்ட் பழுதாகி ஏற்படும் விபத்துக்கு யார் பொறுப்பு? உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

6

புதுடில்லி:
'லிப்ட்' எனப்படும், மின்தூக்கி தொடர்பான விபத்துகளுக்கு அதன் உற்பத்தியாளர், பராமரிப்பு நிறுவனம் மற்றும் கட்டட உரிமையாளர் ஆகியோரே பொறுப்பு' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


மத்திய அரசின் உயரிய உளவு அமைப்பான 'ரா' எனப்படும் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவின் தலைமையகம் டில்லியில் அமைந்துள்ளது. பல மாடி கட்டட அலுவலகமான இங்கு லிப்ட் வசதி உள்ளது. 'ஓடிஸ் எலிவேட்டர் கம்பெனி (இந்தியா) லிமிடெட்' நிறுவனம் வடிவமைத்த இந்த லிப்டை, ராணுவ பொறியியல் பிரிவு பராமரித்து வந்தது.


கடந்த 2003ல், இந்த லிப்ட் இயங்கி கொண்டிருந்தபோதே பழுதடைந்தது. இரு தளங்களுக்கு நடுவே சிக்கிய லிப்டில், ரா அமைப்பின் இயக்குனர் விபின் ஹண்டா உள்ளிட்டோர் சிக்கினர். அவர்களை மீட்கும் போது, திடீரென லிப்ட் மீண்டும் இயங்கியதில் அதில் சிக்கி விபின் ஹண்டா உயிரிழந்தார்.


இது தொடர்பான வழக்கை விசாரித்த தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பாயம், 'இந்த விபத்துக்கு ரா அமைப்பு, ஓடிஸ் நிறுவனம் மற்றும் ராணுவ பொறியியல் பிரிவு மூன்றும் பொறுப்பு. மூவரும் இணைந்து, இறந்த விபின் ஹண்டாவின் குடும்பத்துக்கு 3.01 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்,' என, 2014ல் உத்தரவிட்டது.


இந்த உத்தரவை எதிர்த்து ஓடிஸ் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு, நீதிபதிகள் பி.வி.நரசிம்மா, அலோக் ஆராதே ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.


அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இந்த வழக்கில், மனித தவறால் விபத்து ஏற்பட்டது என லிப்ட் உற்பத்தியாளர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால், மின் அழுத்தத்தில் ஏற்பட்ட ஏற்ற இறக்கம் காரணமாக, லிப்ட் பழுதாகி விபத்து ஏற்பட்டது உறுதியாகிறது. மின் அழுத்தத்தில் பிரச்னை, எட்டு மாதங்களாக லிப்ட் பராமரிக்கப்படாமல் இருந்ததும் தெரியவந்துள்ளது.


இதன் விளைவாகவே விபத்து நடந்து உயிர்ப்பலி ஏற்பட்டது. கட்டட உரிமையாளரை போலவே, பராமரிப்பு நிறுவனம் மற்றும் லிப்ட் உற்பத்தியாளருக்கும், லிப்டில் பயணிப்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பு உள்ளது. எனவே, இந்த விபத்துக்கு லிப்ட் தயாரித்த நிறுவனம் 70 சதவீதம் பொறுப்பேற்க வேண்டும். அதை பராமரித்த ராணுவ பொறியியல் பிரிவு 25 சதவீதமும், ரா அமைப்பு 5 சதவீதமும் பொறுப்பேற்க வேண்டும்.


தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பாயம் அளித்த உத்தரவின்படி, உயிரிழந்த விபின் ஹண்டா குடும்பத்துக்கு 3.01 கோடி ரூபாய் இழப்பீட்டை மூவரும் இணைந்து வழங்க வேண்டும். விபத்து நடந்த தேதியில் இருந்து 9 சதவீத ஆண்டு வட்டியும், 90 நாட்களுக்குள் இழப்பீடு தொகை செலுத்தப்படாவிட்டால், 12 சதவீத வட்டியுடன் வழங்கப்பட வேண்டும். இந்த உத்தரவு முறையாக நிறைவேற்றுவதை தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பாயம் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement