கல்வராயன் மலையில் கோடை விழா துவக்கம் 370 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
கச்சிராயபாளையம், ஆக. 1–
கல்வராயன் மலையில் நடந்த கோடை விழாவின் துவக்க நாள் நிகழ்ச்சியில் இரண்டு அமைச்சர்கள் பங்றே்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் மேற்கு எல்லையாக உள்ள கல்வராயன் மலை சுற்றுலா தளமாக விளங்கி வருகிறது. இதனால் ஆண்டு தோறும் இங்கு கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான கோடை விழா நேற்று துவங்கியது. விழாவிற்கு சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு தலைமை தாங்கினார். வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார், மாவட்ட கலக்டர் பத்மஜா, மாவட்ட எஸ்.பி., ஷஹ்னாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டி.ஆர்.ஓ., ஜீவா வரவேற்றார்.
விழாவில் பல்வேறு அரசு துறை சார்பில் 45 அரங்குகள் அமைக்கப்பட்டது. இதில் அரசு சார்பில் பொது மக்களுக்கு மேற்கொள்ளப்படும் நலத்திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்து விளக்கப்பட்டிருந்தது. காவல் துறை சார்பில் அமைக்கப்பட்ட அரங்கில் போலீசார் பயன்படுத்தும் துப்பாக்கிகள், நவீன ரக ஆயுதங்கள் ஆகியவற்றை காட்சிபடுத்தி இருந்தனர்.
நிகழ்ச்சியில் 2 ஆயிரத்தி 370 பயனாளிகளுக்கு ரூ 3.86 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து பள்ளி மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ., க்கள் ராகேஷ், அருள்விக்னேஷ் உட்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். திட்ட இயக்குனர் ரமேஷ்குமார் நன்றி கூறினார். 6 ஆண்டுகளுக்கு பிறகு கல்வராயன்மலையில் கோடை விழா நடந்ததால் கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் அமைச்சர் வன்னி அரசு பேசும் போது,‘‘ கடந்த 59 ஆண்டு காலமாக மாற்றம் பெறாமல் உள்ள கல்வராயன் மலை இந்த ஆட்சி காலத்தில் கண்டிப்பாக மாற்றம் பெறும். கல்வராயன் மலை பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக வீட்டு மனை பட்டா உள்ளது. வீட்டு மனை பட்டா இல்லாத அனைவருக்கும் பட்டா விரைந்து வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். கல்வராயன் மலை பகுதயில் போதை பொருட்களை கட்டுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கல்வராயன் மலை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதே இந்த அரசின் முக்கிய பணியாக இருக்கும் ,என அமைச்சர் பேசினார்.