தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு  கவுரவம்!: 'லோக்மான்ய திலக்' விருது வழங்கினார் அமித் ஷா

புனே: மஹாராஷ்டிராவில் நடந்த நிகழ்ச்சியில், நம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு, 81, 'லோக்மான்ய திலக்' தேசிய விருதை பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா நேற்று வழங்கினார். அப்போது, நாட்டின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு கொள்கையில் அஜித் தோவல் ஆற்றிய பங்களிப்பு, வரலாற்றில் அவருக்கு நிரந்தர இடத்தை பெற்றுத் தந்துள்ளதாக அமித் ஷா புகழாரம் சூட்டினார். சுதந்திர போராட்ட வீரர் பால கங்காதர திலகரின் நினைவு நாளை ஒட்டி, நாட்டின் முன்னேற்றத்துக்கும், வளர்ச்சிக்கும் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்களுக்கு 'லோக்மான்ய திலக்' தேசிய விருது வழங்கப்படுகிறது. மஹாராஷ்டிராவின் புனேவில் செயல்படும், 'திலக் ஸ்மாரக் அறக்கட்டளை' இந்த விருதை வழங்கி வருகிறது.

தேசிய பாதுகாப்புக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஆற்றிய நம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு இந்தாண்டுக்கான விருது வழங்கப்பட்டது. திலகரின் 106வது நினைவு தினமான நேற்று மஹாராஷ்டிராவின் புனேவில் நடந்த விழாவில், அவருக்கு லோக்மான்ய திலக் தேசிய விருதை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வழங்கி கவுரவித்தார்.

திறமை அப்போது அமித் ஷா பேசியதாவது:

பாதுகாப்பு மற்றும் வெளியுறவு கொள்கையில் அஜித் தோவல் ஆற்றிய பங்களிப்புகள், அவருக்கு நாட்டின் வரலாற்றில் நிரந்தரமான இடத்தை பெற்று தந்துள்ளது. வரலாறு எழுதப்படும்போதெல்லாம், உள்நாடு மற்றும் வெளிநாட்டு பாதுகாப்பை யாரேனும் ஆய்வு செய்தால், அஜித் தோவலுக்காக ஒரு பொன்னான பக்கம் நிச்சயம் ஒதுக்கிவைக்கப்பட வேண்டும். இதில், எந்த சந்தேகமும் இல்லை.

லோகமான்ய திலக்கின் அச்சமற்ற தேசியவாத பார்வைக்கும், அஜித் தோவல் உருவாக்கியுள்ள நவீன கால பாதுகாப்பு கட்டமைப்புக்கும் மிகச் சிறந்த ஒற்றுமை உள்ளது. கடந்த 2014க்கு முன் நாட்டின் வெளியுறவு கொள்கையில் முதுகெலும்பு இல்லாத உறுதியற்ற தன்மை நிலவியது. பிரதமராக மோடி பொறுப்பேற்றதும், தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் நியமிக்கப்பட்டார்.

அன்று முதல் இன்று வரை, நம் நாட்டின் வெளிறவுக் கொள்கை உறுதியுடன் உள்ளது. இதன் வாயிலாக, சுய மரியாதையுடன் உலக அரங்கில் நம் நிலைப்பாடு வலுப்படுத்தப்பட்டு உள்ளது. இதை யாரும் மறுக்க முடியாது. இதற்கு பிரதமர் மோடி தலைமையும், அஜித் தோவலின் திறமையான செயல்பாடும் காரணம்.

உத்வேகம் தேசிய பாதுகாப்பு தொடர்பாக, பிரதமர் மோடி எடுக்கும் ஒவ்வொரு முடிவின் பின்னணியிலும் தோவலின் பங்களிப்பும், ஆலோசனையும் உள்ளது.

குஜராத்தின் உள்துறை அமைச்சராக இருந்தபோது, அஜித் தோவல் அளித்த தகவல் மற்றும் ஆலோசனைகள் வாயிலாக, அம்மாநில போலீசார் ஆமதாபாத் குண்டுவெடிப்பு மட்டுமின்றி நாடு முழுதும் நடந்த 13 குண்டுவெடிப்பு சம்பவங்களில் வெற்றிகரமாக தீர்வு கண்டனர்.

தங்கள் வாழ்நாள் முழுவதையும் சமூகத்திற்காக அர்ப்பணித்தவர்களை கவுரவிப்பது சமூகத்தின் கடமை. இன்று அஜித் தோவலுக்கு வழங்கப்பட்டுள்ள திலக் விருது, நாட்டிற்காக வாழ்ந்து உழைக்கும் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களுக்கு ஒரு பெரும் உத்வேகமாக அமையும்.

இவ்வாறு அவர் பேசினா ர்.

நிகழ்ச்சியில் அஜித் தோவல் பேசுகையில், ''சுதந்திரம் என்பதை ஒருவர் விரும்பியதை செய்வதற்கான கட்டுப்பாடற்ற உரிமையாக இளைஞர்கள் கருதக்கூடாது.

நாட்டிற்காக திலகர் கொண்டிருந்த தொலைநோக்கு பார்வையையும், அவர் வெளிப்படுத்திய தேசத்தை கட்டியெழுப்பும் உணர்வையும் அவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்,'' என்றார்.

கடந்த 1983 முதல் வழங்கப்படும் லோக்மான்ய திலக் தேசிய விருதை பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர்கள் இந்திரா, வாஜ்பாய், மன்மோகன் சிங், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உள்ளிட்டோர் பெற்றுள்ளனர்.

@block_B@

நீண்ட காலம் பணியாற்றியவர்

நம் நாட்டில் நீண்ட காலம் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றிய பெருமையை அஜித் தோவல் பெற்றுள்ளார். சிக்கிம், மிசோரம், பஞ்சாப், ஜம்மு - காஷ்மீர் உட்பட சவால் மிகுந்த பல்வேறு பகுதிகளில் முக்கிய பணிகளை இவர் ஆற்றியுள்ளார். நம் அண்டை நாடான பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டன் ஆகிய இடங்களில் உள்ள இந்திய தூதரகங்களில் அஜித் தோவல் பணியாற்றியுள்ளார். இந்தியா - சீனா எல்லை பேச்சின் போது, நம் நாட்டின் சிறப்பு பிரதிநிதியாகவும் இவர் பங்கேற்றார்.block_B

Advertisement