கேரளாவின் இடுக்கி, கோட்டயம் உள்ளிட்ட மாவட்டங்களில் நிலச்சரிவு!: நான்கு பேர் உயிரிழப்பு
இடுக்கி: கேரளாவின் இடுக்கி, கோட்டயம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி, நான்கு பேர் உயிரிழந்தனர். பலர் மாயமான நிலையில், தேடுதல் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. கேரளாவில், காங்கிரசைச் சேர்ந்த முதல்வர் சதீசன் தலைமையில், ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து, பல்வேறு மாவட்டங்களில் சில நாட்களாக, பரவலாக கனமழை பெய்து வருகிறது.
வெள்ளத்தால் பாதிப்பு
இந்நிலையில், இடுக்கி மாவட்டத்தில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையால், நேற்று அதிகாலை அடூர்மலை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில், வீட்டின் மீது பாறைகள் மற்றும் மண் சரிந்து விழுந்ததில், அங்கு வசித்த சுமதி, 65, என்பவர் உயிரிழந்தார்.
அதிர்ஷ்டவசமாக அவரது கணவர் ரவி, மகன் ரதீஷ் ஆகியோர் உயிர் தப்பினர்.
அதேபோல, இடுக்கி மாவட்டம் வாகமன் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது நிலச்சரிவு ஏற்பட்டதில், பிரபாகரன் நாயர், 77, என்பவர் உயிரிழந்தார். கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த அவர், தன் உறவினர் வீட்டில் துாங்கிய போது நிலச்சரிவில் சிக்கி பலியானார்.
கோட்டயம் மாவட்டம் பூஞ்சார் பைனித்தோட்டம் பகுதியில் நிகழ்ந்த நிலச்சரிவில், இடிபாடுகளில் சிக்கி, ரெஜினா ஜானி, 46, அவரது மகன் ஜோசபின், 24, ஆகியோர் உயிரிழந்தனர். மேலும், நிலச்சரிவுகளில் மாயமான பலரை தேடும் பணி முழு வீச்சில் நடக்கிறது.
கனமழையால், இடுக்கி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள், நிலச்சரிவாலும், வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளன.
உப்பத்துறை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போலீஸ் வாகனம் சேதமடைந்தது.
போக்குவரத்து முடக்கம்
புல்லக்காயாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கொக்கையார் பகுதியில் உள்ள தாழ்வான தரைப்பாலம் நீரில் மூழ்கிஉள்ளது.
கட்டப்பனா - வழுவாரா இடையிலான சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதால், போக்குவரத்து தடைபட்டது. நெல்லிமலை பகுதியிலும் சாலை துண்டிக்கப்பட்டதால் வாகன போக்குவரத்து முடங்கியது.
கோட்டயம் மாவட்டத்தில், எராட்டுப்பேட்டை, காஞ்சிரப்பள்ளி, கூட்டிக்கல், எருமேலி ஆகிய பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளன.
தவிர, பத்தனம்திட்டா, கோழிக்கோடு, மலப்புரம், கண்ணுார், பாலக்காடு ஆகிய மாவட்டங்களிலும் வெள்ளப்பெருக்கும், சிறிய அளவிலான நிலச்சரிவுகளும் பதிவாகியுள்ளன.
மேலும்
-
பூட்டை மாரியம்மன் கோவில் ஆடி மாதத் தேர் திருவிழா
-
சப் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்
-
இந்திய கம்யூ., ஆர்ப்பாட்டம்
-
பைக் மீது லாரி மோதல் 'மாஜி' போலீஸ்காரர் பலி
-
ரேஷன் கார்டில் கைரேகை பதிவு புதுப்பிக்க இன்று இறுதி வாய்ப்பு
-
கோரைப்புற்களால் துார்ந்துள்ள வடிகால் மழைக்கு முன் சரிசெய்ய மக்கள் வலியுறுத்தல்