வணிக காஸ் சிலிண்டர் விலை ரூ.200 குறைவு; ஒரு சிலிண்டர் ரூ.2,906க்கு விற்பனை

5

சென்னை: சென்னையில் இன்று (ஆகஸ்ட் 01) 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் ரூ.200 குறைந்து ரூ.2,906க்கு விற்பனை செய்யப்படுகிறது; வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் வீடுகளுக்கு, 14.20 கிலோ எடையிலும், ஹோட்டல் உள்ளிட்ட வணிக பிரிவுகளுக்கு, 19 கிலோ எடையிலும் சமையல் காஸ் சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப மாதந்தோறும் முதல் நாளன்று, நம் நாட்டில் சமையல் காஸ் சிலிண்டர் விலைகளில் மாற்றம் செய்கின்றன.

மேற்காசிய நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக, பல நாடுகளில், எரிபொருள் விலைகள் அதிகரித்து வருகின்றன. இந்த சூழலில் இன்று (ஆகஸ்ட் 01) 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் ரூ.200 குறைந்து ரூ.2,906க்கு விற்பனை செய்யப்படுகிறது; கடந்த மாதம் 177 ரூபாய் குறைந்து, 3,106 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது ரூ.200 ரூபாய் குறைந்து ஒரு சிலிண்டர் விலை ரூ.3 ஆயிரத்து கீழே இறங்கியது, ஹோட்டல் உரிமையாளர்களுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது.

தமிழகத்தில் ஜூன் 1ம் தேதி வீட்டு சமையல் காஸ் சிலிண்டர், 928.50 ரூபாய்க்கு விற்கப்பட்டது. திடீரென அம்மாதம், 7ம் தேதி, 29 ரூபாய் உயர்ந்து, 957.50 ரூபாயாக விற்கப்பட்டது. கடந்த ஜூலை மாதம், அந்த விலை மாற்றம் செய்யப்படாமல், 957.50 ரூபாயாகவே நீடித்தது. அதேபோல் இம்மாதமும் 14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை; ரூ.957.50 என்ற பழைய விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Advertisement