தனியார் பால் கொள்முதல் விலை உயர்வு 'ஆவின்' நிறுவனத்துக்கு வரத்து சரிவு

உடுமலை: 'தனியார் போல், ஆவினிலும் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்' என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழகத்தில், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக, 'ஆவின்' பால் கொள்முதல் செய்து வருகிறது. ஆறு மாதங்களுக்கு முன்பு வரை, நாள் ஒன்றுக்கு, ஆவின் நிறுவனம், 35 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்தது. கொள்முதல் விலையை உயர்த்தாததால், தனியார் நிறுவனங்களை நோக்கி விவசாயிகள் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆவின் நிறுவனம், ஒரு லிட்டர் பசும்பாலுக்கு, ரூ.35 மற்றும் எருமை பாலுக்கு, ரூ.45 விலை கொடுக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் விலை உயர்த்தவில்லை. ஆனால், தனியார் நிறுவனங்கள், ஆவினை விட, லிட்டருக்கு ரூ.3 கூடுதலாக வழங்கி வந்த நிலையில், நேற்று மேலும், 4 ரூபாய் உயர்த்தி தற்போது, லிட்டர் ரூ.42க்கு கொள்முதல் செய்கின்றன. அதே போல், எருமை பால் லிட்டர், ரூ.60க்கு கொள்முதல் செய்கின்றன.

தனியார் நிறுவனங்கள் கூடுதல் விலை கொடுப்பதால், ஆவின் நிறுவனத்திற்கு, பால் வரத்து, 25 லட்சம் லிட்டராக சரிந்துள்ளது. தனியார் நிறுவனங்கள் பால் கொள்முதல் விலையை, ரூ. 4 உயர்த்திய நிலையில், விற்பனை விலையையும் ரூ.6 வரை உயர்த்தியுள்ளன. இதனால், ரூ. 66 - 74க்கு விற்று வந்த ஒரு லிட்டர் பால், நேற்று முதல் ரூ. 72 - 80 ஆக உயர்ந்துள்ளன. ஆவின் நிறுவனத்தில், ரூ. 50 - 58 வரை பால் விற்கப்படுகிறது.

பால் உற்பத்தியாளர்கள் சங்க மாவட்ட துணைத்தலைவர் பரமசிவம் கூறியதாவது: மாட்டுத்தீவனம், பருத்திக்கொட்டை, பசுந்தீவனங்கள், மருந்து, பராமரிப்பு என, உற்பத்தி செலவினம் அதிகரித்து விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது, ஆவின் நிறுவன கொள்முதல் விலைக்கும், தனியார் நிறுவன கொள்முதல் விலைக்கும், லிட்டருக்கு, ரூ. 7 - 10 வரை வித்தியாசம் உள்ளது. அரசு பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கவும், அரசு நிறுவனத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement