இந்த வாரம் எப்படி இருக்கும்?

நியூட்டரன்: வாங்க அப்பு, டவுனு. இந்தாங்க நீங்க கேட்ட போளியும் காராசேவும். என்னை ஊருக்கு அனுப்பிச்சுட்டு நிப்டியை நல்லா ஏத்திவிட்டுட்டீங்க அப்பு.

அப்பு: போன வாரத்துக்கு முந்தைய வாரம் டவுனு அவர் எதிர்பார்க்காம இறங்குச்சுன்னு சொன்னாருல்ல. இந்த வாரம் நான் சொல்றேன்... நானே எதிர்பார்க்கல இப்படி ஏறுமுன்னு.

டவுனு: குழப்பமா இருக்கும்னு நினைச்சா தெளிவா ஏறிடிச்சே.

நியூட்டரன்: என்னவோ போங்க. ஊருக்கு போய் நிறைய ரூபாய் செலவானதுதான் மிச்சம்.

டவுனு: இங்கே இருந்தா நிறைய ரூபாய் சம்பாதிச்சிருப்பீங்களா!


அப்பு: சொன்ன ஐட்டமெல்லாம் வாங்கிட்டு வந்திருக்காரு... அவரை மன்னிச்சு விட்டுடுவோம்



டவுனு. ஏங்க, போளி காராசேவைத்தான் செலவுங்கிறீங்களா?
நியூட்டரன்: அட நீங்கவேற! அதை சொல்லலீங்க. வர்ற வாரத்துல ஹெச்.எஸ்.பி.சி., உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் சேவை நிறுவனங்களின் கொள்முதல் மேலாளர்களின் குறியீடு, இந்திய ரிசர்வ் வங்கியின் வட்டி விகித முடிவுகள், எம்3 பணப்புழக்கம், வங்கிகள் வழங்கிய கடன் மற்றும் அவற்றில் உள்ள வைப்புநிதியின் அளவில் வளர்ச்சி, அன்னிய செலவாணி கையிருப்பு போன்ற இந்திய பொருளாதார தரவுகள் வெளிவர இருக்குது.

ஐ.எஸ்.எம்., உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் சேவை நிறுவனங்களின் கொள்முதல் மேலாளர்களின் குறியீடு, ஜே.ஓ.எல்.டி.எஸ்., ஜாப் ஓப்பனிங்ஸ், வேலையில்லாத நபர்களின் எண்ணிக்கை போன்ற அமெரிக்க பொருளாதார தரவுகளும் வெளிவர இருக்குது.

டவுனு: ரிசர்வ் வங்கியின் வட்டிவிகித முடிவு முக்கியமான ஒரு விஷயம், மறந்துடாதீங்க.

நியூட்டரன்: இருங்க... சப்போர்ட், ரெசிஸ்டன்ஸையும் சொல்லிடுறேன். 24,040 / 23,697 / 23,492 போன்ற லெவல்களிலே வாராந்திர ரீதியிலான சப்போர்ட்டும், 24,578 / 24,773 / 24,978 போன்ற லெவல்களிலே வாராந்திர ரீதியிலான ரெசிஸ்டன்ஸும் இருக்குது. 24,235தான் வாராந்திர அளவுல மேலேயா கீழேயாங்குறதை முடிவு செய்யற முக்கிய திருப்புமுனை லெவலா இருக்கும்.

அப்பு: ஊருக்கு போயிட்டு வந்து புல் பார்ம்ல இருக்கீங்க போல.

நியூட்டரன்: ரயிலில் வர்றப்ப சப்போர்ட், ரெசிஸ்டன்ஸ் கணக்கு போட்டுட்டு இருந்தேன். ஏற்ற இறக்கம் கடந்த இரண்டு வாரத்தில் அதிகமா இருந்ததால கண்ணாபின்னான்னு இருக்குது.

டவுனு: வர்ற வாரம் எப்படியிருக்கும்னு சொல்லுங்க அப்பு.

அப்பு: ஓ... போனவாரம் ஏற்றம் வந்ததால எனக்கு சிறப்பு வாய்ப்பா?

நியூட்டரன்: எதிர்பார்ப்பை சொல்லுங்கன்னா கிண்டல் பண்றதா நினைக்க கூடாது.

அப்பு: புதன்கிழமை ரிசர்வ் வங்கியின் வட்டிவிகித முடிவுகள் இருக்குது. நிஃப்டி 24,520க்கு மேலே போய் அதற்கு மேலேயே நிலைச்சு நிக்குற வரைக்கும் தொடர் ஏற்றம் என்பதை எதிர்பார்க்க முடியாது.

டவுனு:
ஆமாம். அதுக்கு மேலே போயிட்டா நாங்க கொஞ்சம் அமைதியா வேடிக்கை பார்ப்போம். அதுவரைக்கும் அப்பப்ப எங்க கைவரிசையை காட்டிட்டே இருப்போம்.

நியூட்டரன்: அப்ப 24,520ஐ தாண்டிட்டா ஏற்றம்தானா?

அப்பு: குறைந்தபட்சம் தொடர்ந்து இரண்டு நாளாவது குளோசிங் அதை தாண்டி இருக்கணும்.

நியூட்டரன்: எனக்கு நம்பிக்கையில்லை இது நடக்குமுன்னு.

டவுனு: வேடிக்கை பார்க்குற உங்களுக்கே நம்பிக்கை இல்லைன்னா... வியாபாரம் பண்ற எனக்கு இருக்குமா? இல்ல அப்படி நடக்கத்தான் விட்டுடுவோமா!

நியூட்டரன்:
புரிஞ்சிடுச்சு. 24,520ங்குறதை ஒரு எல்லையா வச்சுக்கிட்டு நீங்க ரெண்டு பேரும் போராடுறீங்க.

டவுனு: இரண்டு நாள் இதுக்குமேலே நிறைவடைந்து செய்திகளும் பாசிட்டிவ்வா இருந்தா நான் ஒரு வாரம் ஊருக்கு போயிடுவேன்.

நியூட்டரன்: உங்க ஊருல மணப்பாறை முறுக்கை வாங்கிட்டு வாங்க.

அப்பு: என்ன நியூட்டரன், உறுதியா ஏற்றமுன்னு கண்டுபிடிச்ச மாதிரி பேசுறீங்க?

நியூட்டரன்: அட! சும்மா பேச்சுக்கு சொன்னேங்க. அந்த அளவுக்கு திராணி இருந்தா நான் ஏன் உங்ககிட்ட ஏச்சு பேச்சு வாங்கிட்டு இருக்க போறேன்?

அப்பு: ப்ரெண்ட்லியா ஏதாவது சொன்னா வருத்தப்படக்கூடாது. சந்தையில நியூட்டரனோட பங்களிப்பு எப்போதும் அவசியம்.

நியூட்டரன்:
புரிஞ்சா சரி.

டவுனு: திங்கள்கிழமை ஒரு நாள் நான் லீவு. நியூட்டரன், சந்தையை பத்திரமா பார்த்துக்கோங்க.

நியூட்டரன்: போற போக்குல எகத்தாளத்தை பாருங்க!

அப்பு: போர் செய்திகள் மேலே கவனம் வையுங்க. தெளிவா குழப்புற மாதிரி செய்திகள் வருது.

டவுனு: ஆமாமாம். அதனாலதான் எதையும் கணிக்க முடியாம போகுது.

அப்பு: புதுசா ஒரு கேக் ஷாப் திறந்திருக்காங்க. பன்னீர் பப்ஸ் பிரமாதமா இருக்குன்னு நண்பர் சொன்னார். வாங்க சாப்பிட்டுட்டு டீ அடிப்போம்.

என்று சொல்ல, மூவரும் கேக் ஷாப்பை நோக்கி நடந்தனர்.

Advertisement