மினி பேட்டி: ஓய்வுகால முதலீடு குறித்த விழிப்புணர்வு அதிகரிக்கிறது

''இளைஞர்கள் சம்பாதிக்க தொடங்கியவுடனேயே ஓய்வுகால முதலீட்டை தொடங்க வேண்டும்'' என்கிறார் ஹெச்.டி.எப்.சி பென்ஷன் பண்டு மேனேஜ்மெண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஸ்ரீராம் ஐயர். அவர் நம் நாளிதழுக்கு அளித்த மினி பேட்டி:

ஓய்வு கால திட்டமிடல் ஏன் முக்கியம்?


ஓய்வு என்பது ஒவ்வொருவர் வாழ்விலும் தவிர்க்க முடியாதது. எனவே, அவரவர் தேவைக்கேற்ப நிதி திட்டமிடல் அவசியம். தற்போது இதுகுறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. தேசிய அளவில் ஓய்வூதிய முதலீட்டில் தமிழகம் 4 வது இடத்தில் உள்ளது.

எந்த வயதில் முதலீட்டை தொடங்க வேண்டும்?

எப்போது சம்பாதிக்க தொடங்குகிறீர்களோ, அப்போதே துவங்கிவிடவேண்டும். தாமதமாக தொடங்கினால், கிடைக்க வேண்டிய லாபம் குறையும்.

இளைய தலைமுறையினருக்கு எப்படி இதனை விளக்குகிறீர்கள்?

பொதுவாக 22 வயதுக்காரருக்கு ஓய்வு காலம் பற்றி பேசினால் திகைப்பர். எனவே, '40 வயதில் ஓய்வு பெற வேண்டுமா? அதற்கு உங்களிடம் என்ன திட்டம் இருக்கிறது?' என்று கேட்க வேண்டியிருக்கும். எங்கள் அனுபவத்தில் 35--45 வயதினர்தான் ஓய்வுகால திட்டங்களில் அதிக அளவில் முதலீடு செய்கிறார்கள். 25- - 35 வயதுக்காரர்கள் அடுத்த நிலையில் வருகின்றனர்.

இத்துறையின் அளவு எவ்வளவு பெரியது?

மத்திய அரசு ஊழியர்களும் பல்வேறு மாநில அரசு ஊழியர்களும் என்.பி.எஸ்., எனும் புதிய பென்ஷன் திட்டத்தில் பயனாளிகளாக உள்ளனர். அவர்களது 14 லட்சம் கோடி ரூபாய் நிதியை அரசு நிர்வகிக்கிறது. தனியார் துறையை பொறுத்தவரை 80 லட்சம் சந்தாதாரர்கள் உள்ளனர். இதில், 22 லட்சம் பேர் கார்ப்பரேட் நிறுவன ஊழியர்கள். 58 லட்சம்பேர் தனி நபர்கள்.

பி.எப்., நிதி, பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படுவது குறித்த அச்சம் இயல்பானதுதானே?


பொதுமக்களின் நிதி பாதுகாப்புக்கு ஓய்வூதிய ஒழுங்குமுறை அமைப்பான பி.எப்.ஆர்.டி.ஏ., நடவடிக்கை எடுக்கிறது. அதன் விதிமுறைகளின்படி, ஓய்வுகால நிதி திட்டங்கள், டாப் 250 நிறுவன பங்குகளில் மட்டுமே முதலீடு செய்யப்படவேண்டும். அதேபோல, கடன் பத்திர முதலீட்டில் ஏஏ+ தரக்குறியீடு உள்ள பத்திரங்களில் மட்டுமே முதலீடு செய்ய முடியும். எனவே, அச்சம் வேண்டியதில்லை.

முறைசாரா துறையினருக்கு ஓய்வுகால திட்டங்கள் செல்கின்றனவா?


இதற்காக பி.எப்.ஆர்.டி.ஏ., பல விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொள்கிறது.சொமாட்டோ நிறுவனத்தின் 2 லட்சம் ஊழியர்களை எங்கள் நிறுவனம் சந்தாதாரர் ஆக்கியுள்ளது. அண்மையில் அர்பன் கம்பெனி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருக்கிறோம்.


கடந்த 2011ல் தொடங்கப்பட்ட ஹெச்.டி.எப்.சி., பென்ஷன் நிறுவனம், 1.80 லட்சம் கோடி ரூபாய் ஓய்வூதிய நிதியை நிர்வகிக்கிறது. இது இத்துறையில் 43 சதவீத சந்தை பங்கு ஆகும். மொத்தம் 5, 300 நிறுவனங்களின் ஊழியர்கள் உட்பட மொத்தம் 8 லட்சம் சந்தாதாரர்கள், 4,500 முகவர்களுடன் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

ஹெச்.டி.எப்.சி பென்ஷன் நிறுவனம்



ஸ்ரீராம் ஐயர்,





நிர்வாக இயக்குனர்,



ஹெச்.டி.எப்.சி பென்ஷன் பண்டு மேனேஜ்மெண்ட் நிறுவனம்

Advertisement