இன்சூரன்ஸ் : காதல் கடிதத்துக்கு சரியான முகவரி தேவை

ஆயுள் காப்பீடு விற்கும்போது, குடும்பத்தில் உள்ள பெண்களையும் சந்திக்க வேண்டும் என்பதில் காப்பீட்டு முகவர்கள் கவனம் செலுத்துவார்கள். ஆண்கள் ஆயுள் காப்பீடு எடுப்பதில் தயக்கம் காட்டலாம். ஆனால், குடும்பத்தின் வருமானத்தை ஈட்டும் நபரை இழந்தால் குடும்பம் சந்திக்கும் சிரமங்களை பெண்கள் நன்கு உணர்ந்திருப்பார்கள். அதனால், பாலிசி வாங்க வேண்டும் என்று வலியுறுத்துபவர்களாகவே அவர்கள் இருப்பார்கள். இந்த மனநிலையை முகவர்கள் நன்றாக புரிந்துகொண்டிருக்கிறார்கள்.

நீங்கள் இல்லாதபின் உங்கள் அன்புக்குரியவர்கள் நிதி நெருக்கடிக்கு ஆளாகாமல் இருக்க இருக்க ஆயுள் காப்பீடு எடுப்பது மிகவும் அவசியம். அதே அளவுக்கு, அந்த பாலிசியின் பலன் நீங்கள் நினைத்தவர்களுக்கே சென்று சேர்வதும் முக்கியம். இந்த தொடரின் கடந்த இரண்டு பகுதிகளில், நாமினேஷன் மற்றும் அசைன்மென்ட் பற்றி பார்த்தோம்.
Latest Tamil News
ஆனால், நடைமுறையில் நாம் நினைப்பதுபோல எல்லாம் நடப்பதில்லை. ஒருவரின் மரணத்திற்கு பிறகு, பணம் குடும்பத்தில் கருத்து வேறுபாடுகளை உருவாக்குவது அரிதல்ல. கூட்டு குடும்பம், குடும்ப தொழில், வெளிப்படையாக சொல்ல முடியாத கடன் பொறுப்புகள் என பல காரணங்களால், விதவையான மனைவியும் குழந்தைகளும் பாதிக்கப்பட கூடாது. சில நேரங்களில் விதவையான தாய்க்கு எதிராக வளர்ந்த பிள்ளைகள் உரிமை கோரலாம்.


இதற்கு ஒரு தீர்வு இருக்கிறதா?



ஆம். அதுவும் வலுவான சட்ட பாதுகாப்புடன் கூடிய தீர்வு இருக்கிறது. அந்த சட்டத்தின் கீழ் பாலிசி எடுக்கப்பட்டிருந்தால், மனைவியின் உரிமையை எதிர்த்து யார் நீதிமன்றம் சென்றாலும், அவருடைய உரிமையே பாதுகாக்கப்படும்.
திருமணமான பெண்களின் சொத்துரிமை சட்டம் 1874 என்பது பெண்களின் சொத்து உரிமையை பாதுகாப்பதற்காக இயற்றப்பட்ட ஒரு முக்கியமான சட்டம். திருமணமான பெண்ணின் சொத்து, சம்பளம், வருமானம், முதலீடுகள், சேமிப்புகள் ஆகிய அனைத்திற்கும் அவரே முழு உரிமையாளர்.

திருமணத்திற்கு பிறகு அவற்றின் மீது கணவருக்கு எந்த உரிமையும் கிடையாது. மாமியார் குடும்பம், உறவினர்கள் அல்லது கணவரின் கடனாளிகள் போன்றவர்களிடமிருந்து பெண்ணின் சொத்துகளை பாதுகாப்பதே இந்த சட்டத்தின் நோக்கம்.

இந்த சட்டத்தில் ஆயுள் காப்பீடு தொடர்பாகவும் ஒரு முக்கியமான விதி உள்ளது. சட்டத்தின் பிரிவு 6ன்படி, கணவர் தனது ஆயுள் காப்பீட்டு பாலிசியை மனைவி அல்லது மனைவி மற்றும் குழந்தைகள் பயன்பெறும் வகையில் எடுத்திருந்தால், மரண பலன், முதிர்வு தொகை அல்லது போனஸ் உள்ளிட்ட அனைத்திற்கும் அவர்கள் மட்டுமே முழு உரிமையாளர்கள்.

மனைவியை இழந்தவர்கள் அல்லது விவாகரத்து பெற்றவர்கள் தங்கள் குழந்தைகளை பயனாளிகளாக நியமிக்கலாம். எவ்வளவு சதவீதம் யாருக்கு செல்ல வேண்டும் என்பதையும் முன்கூட்டியே குறிப்பிடலாம்.

எளிமையாக சொன்னால், இந்த பாலிசி பயனாளிகளுக்காக உருவாக்கப்பட்ட ஒரு அறக்கட்டளை போல செயல்படும். அந்த பாலிசியின் மீது கணவருக்கோ, அவரது கடனாளிகளுக்கோ அல்லது அவரது சொத்து மீது உரிமை கோருபவர்களுக்கோ எந்த உரிமையும் இருக்காது.

இதற்காக, பாலிசி கணவரின் ஆயுளின் மீது எடுக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும், அது எம்.டபிள்யூ.பி., சட்டத்தின் கீழ் எடுக்கப்படுகிறது என்பதை விண்ணப்ப படிவத்தில் குறிப்பிட்டிருக்க வேண்டும். இந்த தேர்வை பாலிசி எடுக்கும்போதே செய்ய வேண்டும். பின்னர் இதை சேர்க்கவோ, மாற்றவோ, ரத்து செய்யவோ முடியாது.


திரும்ப பெற முடியாத முடிவு


எம்.டபிள்யூ.பி., சட்டத்தின் கீழ் எடுக்கப்படும் பாலிசி, பயனாளிகளுக்கான அறக்கட்டளையாக இருப்பதால், அதை நீங்கள் கூட மாற்ற முடியாது, ரத்து செய்ய முடியாது. நீங்கள் இறந்த பிறகு அது உங்கள் சொத்து என கருதப்படாது. பாலிசியில் குறிப்பிடப்பட்டுள்ள பயனாளிகளை தவிர வேறு யாரும் அதன் மீது உரிமை கோர முடியாது.
உங்கள் கடன்களை வசூலிப்பதற்காக இந்த பாலிசியை நீதிமன்றம் முடக்கவும் முடியாது. பாலிசி எடுத்த பிறகு நீங்கள் மனைவியை விவாகரத்து செய்தாலும், அவர்தான் தொடர்ந்து அந்த பாலிசியின் பயனாளியாக இருப்பார்.

இந்த பாலிசியின் மீது கடன் பெற முடியாது. பாலிசியை இடைநிறுத்தி பணத்தை பெற விரும்பினாலும், பயனாளிகள் அதற்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட வேண்டும். கிடைக்கும் தொகையும் அவர்களுக்கே வழங்கப்படும்.

அந்த பணம் பயனாளிகளிடம் சென்றடைந்த பிறகு, அதை பாதுகாத்து, சரியாக பயன்படுத்தும் மன உறுதியும் தன்னம்பிக்கையும் அவர்களுக்கு இருக்க வேண்டும். அதற்கான மனப்பக்குவத்தை உருவாக்குவதும், தேவைப்படும் நேரத்தில் அவர்களுக்கு ஆதரவாக நிற்கக்கூடியவர்களையும் நீங்கள் முன்கூட்டியே ஏற்பாடு செய்து வைப்பது நல்லது.

ஆயுள் காப்பீட்டை விற்கும்போது முகவர்கள் அடிக்கடி சொல்வது: ஆயுள் காப்பீடு பாலிசி என்பது, “உங்கள் மனைவிக்கு நீங்கள் எழுதும் மிகச் சிறந்த காதல் கடிதம்”

அந்த காதல் கடிதத்தை சரியான முகவரிக்கு அனுப்புகிறீர்களா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.

Advertisement