இடுக்கியை மிரட்டிய மழை குறைந்ததால் மக்கள் நிம்மதி; சுற்றுலாவிற்கு தடை நீட்டிப்பு

மூணாறு: கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் இரு தினங்களாக மிரட்டிய தென்மேற்கு பருவமழை குறைந்ததால், மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

இம்மாவட்டத்தில் ஜூலை 30ல் பலத்த மழை பெய்ய தொடங்கியது. ஜூலை 31ம் தேதி இரவில் கன மழையாக மாறியது. இதனால், நிலச்சரிவு ஏற்பட்டு இருவர் பலியானதால் மக்கள் அச்சம் அடைந்தனர். இன்று மழை குறைந்ததால் மக்கள் நிம்மதி அடைந்தனர். இன்று காலை, 8:00 மணி நிலவரப்படி மாவட்டத்தில் சராசரியாக, 71.29 மி.மீ., மழை பெய்தது. தாலுகா வாரியாக (மி.மீ.,) தேவிகுளம், 99.4, உடும்பன்சோலை, 33, பீர்மேடு, 85.66, இடுக்கி, 80.66, தொடுபுழா, 57.8 என பதிவானது.

மக்கள் தங்குவதற்கு மாவட்டத்தில், 13 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு, 73 ஆண்கள், 81 பெண்கள், 33 சிறார் என, 187 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கனமழையால் நேற்று ஆறுகளில் வெள்ளப்பெருக்கும், நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்தும் கொட்டின. மழை குறைந்ததால், அவற்றில் நீர் வரத்து சற்று குறைந்தது.

மாவட்டத்தில் மழை தொடர்வதால் சுற்றுலாவுக்கு முழுயாக தடை விதித்து, இடுக்கி கலெக்டர் தினேசன்செருவாட் உத்தரவிட்டிருந்தார். வானிலை ஆய்வு மையம், மழைக்கு தொடர்ந்து முன்னெச்சரிக்கை விடுத்து வருவதால், சுற்றுலாவுக்கு விடுக்கப்பட்ட தடை தொடர்கிறது.

Advertisement