போதைப் பொருள் இல்லா இந்தியாவை உருவாக்குவது நமது கடமை: கவர்னர்

புதுச்சேரி: போதைபொருள் பயன்பாடு நாட்டின் வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் முடக்குகிறது என, கவர்னர் கைலாஷ்நாதன் பேசினார்.

பிரதமர் மோடி போதை பொருள் இல்லாத இந்தியா இயக்க திட்டத்தை துவக்கி வைத்து, வீடியோ கான்பிரன்ஸ் வாயிலாக நாடு முழுதும் உரையாற்றினார். அதன் நேரடி ஒளிபரப்பு, புதுச்சேரி பல்கலைக்கழக மாநாடு மற்றும் கலாசார மைத்தில் நடந்தது.

நிகழ்ச்சியில், கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, துணை வேந்தர் பிரகாஷ்பாபு, தலைமை செயலர் சரத் சவுகான், மை பாரத் திட்ட மாநில துணை இயக்குனர் திரவீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சியில் கவர்னர் கைலாஷ்நாதன் பேசியதாவது:

நமது முன்னேற்றம், காலாசாரம், எதிர்காலத்தை அச்சுறுத்தும் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறோம். போதைப் பொருள் பயன்பாடு, சமூகம் எதிர்கொள்ளும் கடுமையான அச்சுறுத்தலாகும். இது, வீடு, பள்ளி, பல்கலைகழகங்களில் மெல்ல பரவி வருகிறது. போதை பொருள் புழக்கம், சமூகத்தின் அடித்தளத்தை சிதைக்கிறது. திறமையான இளம் வயதினர் தங்கள் பாதையை இழந்து வருகின்றனர். 

போதை பொருள் பயன்பாடு ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் முடக்குகிறது. போதைக்கு அடிமையான லட்சக்கணக்கான இளைஞர்களின் உற்பத்தி திறன் இழப்பு, 2030ம் ஆண்டுக்குள் மூன்றாவது பெரிய பொளாதாரமாக உருவெடுப்பதற்கு பின்னடைவை ஏற்படுத்துகிறது. 

போதை பொருள் கடத்தலால், கிடைக்கும் சட்டவிரோத பணம், தேசவிரோத செயல்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. போதைபொருள் பயன்பாடு தேசிய பாதுகாப்பிற்கு நேரடி அச்சுறுத்தலாக உள்ளது. போதை பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்குவது, நமது கடமையாகும். இவ்வாறு கவர்னர் பேசினார். 

நல்ல இளைஞர்களை ஊக்குவிப்பது அவசியம் நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி பேசுகையில், ‘நம்நாடு வளர்ச்சியை நோக்கி செல்வதற்கு பிரதமரின் தொலைநோக்கு பார்வை தான் காரணம். நல்ல இளைஞர்களை இனம் கண்டு ஊக்குவிப்பது அவசியம். மாணவர்கள் நல்ல பழக்கங்களை பள்ளி பருவத்தில் இருந்தே கொண்டு வரவேண்டும். அப்போது தான், அவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். போதை பழக்கங்களை அறவே ஒழிக்க வேண்டும். சமுதாயத்தை சீர்கெடுக்கும் போதை பழக்கங்களை அழிக்க வேண்டியது நம் கடமை’ என்றார்.

Advertisement