டிரம்ப் சொல்வது பொய்: ஈரான் பதிலடி
டெஹ்ரான்: ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க எந்த ஒப்பந்தமும் போடப்படவில்லை எனத் தெரிவித்துள்ள ஈரான், தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்காவிடம் வேண்டுகோள் ஏதும் வைக்கவில்லை எனத் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து மேற்காசிய நாடான ஈரான் மீது தொடர்ந்த போர் ஐந்து மாதங்களாக நீடித்து வருகிறது. இதனால், சர்வதேச கச்சா எண்ணெய் கப்பல் போக்குவரத்துக்கு முக்கிய வழித்தடமாக விளங்கும் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியை ஈரான் மூடியது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் வர்த்தகம் தடைபட்டதால், சர்வதேச நாடுகளில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலை உயர்ந்ததுடன், தட்டுப்பாடும் நிலவி வருகிறது.
கடந்த ஜூன் மாதம் ஈரான் - அமெரிக்கா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. எனினும் ஓமன் கடற்பகுதியில் வந்த வணிக கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியதால், அந்த ஒப்பந்தத்தை அதிபர் டிரம்ப் ரத்து செய்தார். ஈரான் மீது மீண்டும் வான்வழி தாக்குதல்களையும் தீவிரப்படுத்தினார்.அதற்கு பதிலடி தரும் வகையில், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை ஈரான் குறிவைத்து தாக்கியது.
கடந்த வாரம் ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவத் தளத்தின் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, ஈரான் மீது மிக கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என டிரம்ப் எச்சரித்திருந்தார். அமெரிக்கா மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தினால், வளைகுடாவில் மேலும் பதற்றம் அதிகரிக்கும் என சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மான் கவலை தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் டிரம்புடன் தொலைபேசியில் பேசிய அவர், ஈரானின் எரிபொருள் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தினால், பதிலுக்கு வளைகுடா நாடுகளில் உள்ள எரிபொருள் உள்கட்டமைப்புகளுக்கு ஈரான் குறிவைக்கும் என எச்சரித்ததாக கூறப்படுகிறது. தவிர, ஈரானுடனான போரை முடிவுக்கு கொண்டு வர வளைகுடா நாடுகள் மத்தியஸ்தம் நடத்தி, புதிய அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தப் போவதாக அமெரிக்காவிடம் தெரிவித்தன.
இதையடுத்து, ஈரான் மீதான தாக்குதலை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூக வலைதளத்தில் அவர் கூறியதாவது:
ஈரானின் அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைப்பது மற்றும் உலக வர்த்தகத்திற்கு மிக முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாக திறப்பது உள்ளிட்ட முக்கிய நிபந்தனைகளுடன் இந்த அமைதி ஒப்பந்தத்தின் வரைவு தயாராகி வருகிறது.
உலக நாடுகளின் நலன் கருதியும், ஈரானின் எதிர்கால வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும் புதிய தாக்குதல்களை ரத்து செய்ய ஒப்புக்கொண்டுள்ளேன். ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளும் பணியில், அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட இஸ்ரேலும் ஒப்புக்கொண்டுள்ளது.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
ஆனால், இதனை மறுத்துள்ள ஈரான், அமெரிக்கா உடன் எந்த ஒப்பந்தமும் ஏற்படவில்லை எனத் தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்காவின் தாக்குதல்கள் தொடரும் வரை ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு தான் இருக்கும். போரை நிறுத்தி வைக்க வேண்டும் என ஈரான் சொன்னதாக டிரம்ப் கூறுவது பொய்யைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. எதனையும் சமாளிக்க ஈரானிய படைகள் தயாராக உள்ளன எனத் தெரிவித்துள்ளது.